சனி, 8 செப்டம்பர், 2012

ஜட்ஜஸ் ஒரு பார்வை - II

எந்த ஒரு பதவிக்கும், இந்தளவு படிப்பு இத்தனை வருட அனுபவம் என்ற அளவுகோல் உண்டு, அது போல் இந்த போட்டியின் ஜட்ஜஸாக வர என்ன அளவுகோல்? - ”பணம்” தான். ஆம் ஒரு சேனலால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அது தான் அந்தந்த சேனலுக்கான நடுவர்களின் அளவுகோல்.

விஜய் சேனலை பொருத்தவரை அது காங்கிரஸ் போல பணக்கார சேனல் ஆகையால் அவர்களால் பிரபலமான பாடகர்கள், நடிகர்களை நடுவர்களாக அமர்த்த முடியும்.

சன் மற்றும் ஜெயா சேனல்களை பொருத்தவரை அது திமுக போல, எவ்வளவு சம்பாதித்தாலும் அடுத்தவனுக்கு கொடுக்க மனசு வராது. அதே சமயம் நிகழ்ச்சியும் ஹிட்டாகனும், அதனால் அதிகம் பிரபலமாகாத பாடகர்களையே, இசையமைப்பாளர்களையோ, நடிகர்களையோ அமர்த்தி, நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்னு பீத்திக்கும்.

ஸீ மற்றும் கலைஞர் சேனலை பொருத்தவரை ஏதாவது டிவி நிகழ்ச்சியில் தலைகாட்டிய அல்லது ஏதாவது சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து வாய்ப்பு கிடைக்காமலேயே முதுமை அடைந்த அளவு பிரபலமானவர்களாக இருந்தால் போதும். ஏழைக்கேத்த எள்ளுருண்டை.


கடைசி கேட்டகிரி நம்ம ராஜ் டிவி, இதில் நடுவராக எந்த துறையிலும் எட்டிக்கூட பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. ராஜ் டிவியிலேயே முந்தின சீசன்ல கலந்துகிட்டு ஃபைனல்ஸ் வரை வந்திருந்தாலே போதும் நீங்களும் ஜட்ஜ் தான்.


இதுவரை ஜட்ஜஸ் குவாலிஃபிகேஷன்ஸ் பார்த்தோம், இனிமே ஜட்ஜ்மெண்ட் காப்பிய பார்ப்போம்.


  •  “எனக்கு ப்ர்ஃபெக்‌ஷன் தான் முக்கியம்”
  •  “ஒழுங்கா உச்சரிக்கவே வராத நீயெல்லாம் எதுக்குப்பா பாட வர”.
  •  “மொத பாட்டுன்னா என்னான்னு கத்துக்கிட்டு வா”
  •  “முகத்தில பாவமேயில்ல, பாவம் மொகத்தில இருந்தாதான் குரல்ல வரும்”.
  •  ”நீ ஆடினதுக்கு பேர் டான்ஸா ?, உன்னை யாரு டான்ஸர்னு சொன்னது ”
  •  ”கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகல, லவ்வர்ஸ் மாறியா ஆடுனீங்க, நீ ஒரு பக்கம் போற, அவ ஒரு பக்கம் போறா, கன்றாவியா இருந்துச்சு”.

ஏண்டா திட்ற பேமானின்னு கோவப்படாதீங்க, மேல சொன்னதெல்லாம் ஜட்ஜஸ் சொன்ன ஸ்டேட்மெண்ட்ல ஒரு சின்ன சாம்பிள் தான்.


ஒரு ஜட்ஜ் எனக்கு பர்ஃபெக்‌ஷன் தான் முக்கியம் இல்லன்னா கோபப்படுவேன் தப்பா நினைச்சுக்காதீங்க, அப்படின்னு எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு, அதையே சாக்கா வைச்சு மானாவாரியா திட்றாரு. ஒருபொண்ணு பாட்டு கத்துகிறேன்னு சொன்னதும், இது என்ன ஸ்கேல், அது என்ன ஸ்கேல்ன்னு டெஸ்ட் மேல டெஸ்ட் வச்சு கடைசியில, நீயெல்லாம் பாட்டு கத்துகிறேன்னு வெளியே சொல்லிடாத, அப்படின்னு அன்பா அட்வைஸ் செய்றாரு.

பாவத்துடன் பெரிய பாடகர்கள்
முகத்துல பாவமேயில்ல அப்படிங்கிறது ஒரு குற்றச்சாட்டா ? அவங்கயெல்லாம் பாட வந்தாங்களா நடிக்க வந்தாங்களா? முகத்துல பாவம் காட்டினாதான் பெரிய பாடகருங்கன்னா, எல்லா மேடைகளிலும் பிடிச்சு வச்ச பிள்ளையாரு கணக்கா நின்னு பாடற எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன், எஸ்.என். சுரேந்தர் எல்லாம் பாடவே லாயக்கில்லாதவங்களா?

பாவமில்லா பாடகிகள்

சென்னை தமிழ்-ல பேசினா ஒழுங்கா உச்சரிக்கவே வராத நீயெல்லாம் எதுக்குப்பா பாடவரன்னு கேக்குறாரு ஜட்ஜ். நன்னாயிருக்கேளா...?, செத்த நாழியிருங்கோ, அவாட்ட கேட்டேளா...? அப்படின்னு நாளும் பேசுற உங்கலாலேயே ஒழுங்கா பாட முடியும்போது, அவன் கொஞ்சம் முயற்சி செய்தால் முடியாதா...? அவனை பாட சொல்லி திருத்த நினைக்காம, பேசின உடனே ரிஜக்ட் பண்ணா சரியா மிஸ்டர் ஜட்ஜ்.


இன்னொரு ஜட்ஜ் கேக்குறாங்க, நீ ஆடினதுக்கு பேர் டான்ஸா...? உன்ன யாரு டான்ஸர்னு சொன்து...? என்னோட கேள்வி என்னன்னா, இது என்ன பரத நாட்டிய போட்டியா, இதுதான் பாவம், இதுதான் முத்திரைன்னு இலக்கண சுத்தமாயிருக்கிறதுக்கு. எல்லா பயலும் ஒரு குத்து மதிப்பா (குத்துக்கு என்ன மதிப்புன்னு கேட்டு கொலகாரனாக்கிபுடாதீங்க) கையையும் காலையும் தூக்கி, ஸ்டேஜிலேயே அங்கங்க விழுந்து புரண்டு, ஒலிம்பிக்ஸ்ல காட்ட வேண்டிய ஜிம்னாஸ்டிக்க இங்க கொண்டு வந்து காட்டி, வேல வெட்டியில்லாத உங்களையெல்லாம் குஷி படுத்துனா..., வாடைகைக்கு எடுத்த டிரெஸ்ஸை போட்டுகிட்டு, விரைப்பா உக்காந்துகிட்டு, கடுப்பா மூஞ்ச வச்சிகிட்டு, எவண்டா உன்ன டான்சர்னு சொன்னதுன்னு கேக்குறீங்களே மிஸஸ் ஜட்ஜ். இதே கேள்விய உங்க படத்த பார்த்து கேட்க நினைச்சு நாகரீகம் கருதி கேட்காம விட்ட நாங்க எவ்வளவு டீசண்ட்னு யோசிச்சு பாருங்க.


இதில கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகலைன்னு ஒரு குறை வேற !!!. நான் இங்கிலீசுல ரொம்பவே வீக்குன்றதால எனக்கு இந்த கெமிஸ்ட்ரீக்கு அர்த்தமே புரியல. என்ன தான் எதிர்பாக்குறீங்க மிஸஸ் ஜட்ஜ்... ? ஆட்டம் ஆடும்போதே மேடையிலேயே ஏதாவது ரசாபாசம் ஆகி உங்க டி.ஆர்.பி ரேட் எகிறனும்னு நினைகிறீங்களா..? அப்பயாச்சும் வேதியியல் ஒர்கவுட் ஆயிடுச்சின்னு ஒத்துக்குவீங்களா...?. ஏற்கனவே பங்கேற்க வந்தவங்கள எனக்கு ஓட்டு போடு, எனக்கு ஓட்டு போடுன்னு பிச்சையெடுக்க வச்சாச்சு, இதில கெமிஸ்ட்ரியும் ஒர்கவுட் ஆகிடுச்சின்னா, ராத்திரி 8 மணிக்கு போடுற புரோகிராம, 12 மணிக்கா மாத்தி மிட் நைட் நிகழ்ச்சியா ஓட்டுற ப்ளான் ஏதும் வச்சிருக்கீங்களா..?


ஆக நடுவர்கள் அவங்க வேலைய (அழவைக்கிற) சிறப்பா செய்யிறாங்க. சேனல்கள் நல்லா கல்லா கட்டுது. டிவியில முகம் காட்ற ஆசையிலும், கொடுக்கப் போகிற பிரம்மாண்டமான பரிசை நினைச்சும், இளைய தலைமுறை இவர்களுக்கு கோமாளியாக வேலை பார்த்துகிட்டு இருக்கு. இவங்களுக்கெல்லாம் கடிவாளம் போட வேண்டிய அரசாங்கம் முதல் ரோவுல உக்காந்து காலாட்டி ரசிச்சிகிட்டு இருக்கு.

வெளங்கிடும் இந்த தேசம்.



அன்புடன் முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்