புதன், 19 செப்டம்பர், 2012

புலம்பல்கள் - 19/09/2012

 

விலைவாசி.


இன்று முழு முதற்கடவுள் விநாயகனுக்கு பொறந்த நாள், மனிதர்களை போல் கேக் வைத்து கொண்டாட கூடாது என்ற வீட்டம்மாவின் அன்புக் கட்டளை காரணமாக, பிள்ளையாருக்கு பிடித்தமான அயிட்டங்கள் வாங்க கடைக்கு சென்றேன். ஒவ்வொரு பொருட்களின் விலையையும் கேட்ட பின், நம்மை போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு பிறந்த நாள் கொண்டாடங்கள் தேவையா என்ற எண்ணம் வந்தது. ஆனாலும் கடைகளில் கூட்டம் அலை
மோதியது. சரி நடைபாதை கடைகளில் ஏதாவது வாங்கலாம் என்றால், அது மிக பெரிய மாபியா கும்பல்களாக உள்ளது. நாவல் பழம் பத்து ரூபாய் என்றான், ஆனால் மொத்த பழமே ஏழுதான் இருந்தது, அதுவும் காய்ந்து சதைப் பற்று இல்லாமல். என்னதான் கணக்கோ தெரியவில்லை. தென்னை ஓலை தோரணம் ஒன்று மூன்று ரூபாய்கள். கடைக்காரரிடம் கேட்டேன் கொஞ்சம் குறைத்துக் கொள்ள கூடாதா ?
 தென்னந்தோப்புகளில் பணம் கொடுத்து ஓலைகள் வாங்கி பின்பு தோரணம் செய்து  விற்கிறோம், கட்டுபடியாகாது என்றார்.
இருந்தாலும் நான்கு கடை தள்ளி விற்றுக் கொண்டிருந்த பெண்மணியிடம் கேட்டேன்.
ஏம்மா இதெல்லாம் ரோட்டோரத்தில் இருக்கும் மரத்தில் பறித்தது தானே...? விலை குறைக்க கூடாதா...?.

அய்யே சாமி அம்புட்டும் எங்க வூட்டு மரத்தில இருந்து பறிச்சது. வேணுமின்னா எங்க வூட்டுக்காரரு அங்கன வித்துக்கிட்டு இருக்கிறார் கேட்டு பாருங்க.

ம்.... வியாபார தந்திரம்.

சரி பிள்ளையார் குடை என்ன விலையென்று கேட்டால், முப்பது ரூபாய் என்றான். ஒரு குடையே முப்பது ரூபாய் எனும் நிலையில், ஒரு நாளைக்கு முப்பத்து இரண்டு ரூபாய் சம்பதிப்பவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் என்று சொன்ன மாண்டேக் சிங் அலுவாலியா வை வீடு தேடிப்போய் உதைக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த வரிசை மிக நீளமாக இருப்பதாக நண்பன் சொன்னதால் வலைப்பக்கத்தில் கொட்டி விட்டேன்.


அஞ்சல்துறை


என் நண்பன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டதால், அவனது குடும்ப அட்டையை சென்னைக்கு மாற்ற வேண்டி, ஊரில் இருந்த அம்மாவிடம் அவனது குடும்ப அட்டையை அனுப்பி வைக்க சொன்னான். அவரும் ரெஜிஸ்டர் போஸ்டில் அனுப்பி வைத்தார். ஒரு வாரமாகியும் வராததால் அவன் அஞ்சலகம் சென்று கேட்டான். அலுவலர் மிகவும் அலட்சியமாக இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து பார்க்க சொன்னார். அனுப்பியது குடும்ப அட்டை, அதுவும் தொலைந்து போனால், அரசிடமிருந்து திரும்ப பெறுவது குதிரைக் கொம்புதான். நண்பன் சற்று குரலை உயர்த்தி, என்ன பொறுப்பில்லாமல் பேசுகிறீர்கள் என்றான். அலுவலர் சொன்னார், எங்கள் கணக்குப்படி அதிகபட்சம் 21 நாட்களுக்குள் உங்களுக்கு தபால் வரும். அப்படி இல்லையென்றால் 22ம் நாள் வந்து கம்ப்ளெண்ட் கொடுங்கள் என்றார். அடுத்து ஒருவாரத்தில் அவரது தபால் கிடைத்தது.

உலகம் எவ்வளவொ முன்னேறி விட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கூட ஒருவாரத்தில் அஞ்சல் அனுப்ப படுகிறது. தனியார் கூரியர் நிறுவனங்கள் கூட ஒரே நாளில் நாட்டின் எந்த மூலைக்கும் அஞ்சல்களை அனுப்புகிறது. ஆனால் நாட்டின் மிகப் பெரிய வலை அமைப்பை கொண்ட இந்திய அஞ்சல் துறை, காலத்திற்க்கேற்ற மாற்றங்களை செய்யாமல் பத்தாம் பசலித்தனமாக, அஞ்சலகங்களை அழிய விடாமல் காப்பற்றுங்கள் என்று கதறிக் கொண்டிருக்கிறது.

தள்ளாடும் முடிவுகள்


டீசல் விலையேற்றத்தை கண்டித்து எதிர் கட்சிகள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றன. தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு நடைப்பெறும் நேரத்தில், இது போன்ற அறிவிப்பால் பள்ளிகள் அந்த ஒரு தேர்வை மட்டும் வேறு நாட்களுக்கு தள்ளி வைத்து அனைவருக்கும் அறிவித்தது. ஆனால் திடீரென தற்போது மீண்டும் பள்ளியும், தேர்வுகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இது யாருடைய முடிவு என்பது ஒருபுறம் இருக்க, தமிழக அரசே கலந்து கொள்ளும் ஒரு வேலை நிறுத்தத்தினால் எப்படியும் வாகனங்கள் ஏதும் ஓடப்போவதில்லை. தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வந்து தேர்வு எழுதுவார்கள் என்பது புரியவில்லை. டாஸ்மாக் வருமானத்தில் அரசு செயல்படுவதால் தான் அரசின் முடிவுகளும் தள்ளாடுகின்றன போலும்.


அன்புடன்
முத்துக் குமரன்.4 கருத்துகள்:

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்