வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குழந்தைகளுக்கு எமனாகும் ஆசிரியர்கள்

சிறுவயதில் நான் அதிகம் சேட்டை செய்வதுண்டு, வாரம் ஒருமுறையாவது என் பள்ளிக்கு என் அப்பா வந்து செல்வார். ஒருமுறை என் நண்பன் மீதிருந்த கோபத்தில் காம்பஸ் எடுத்து, அவன் சைக்கிள் டயரை பல முறை குத்திவிட்டேன். ஆனால் அடுத்த நாள்தான் தெரிந்தது நான் பஞ்சர் செய்த டயர்
என் வகுப்பு ஆசிரியருடையது என்று. முதல் நாள் நான் செய்த வேலையால் ட்யூபையே மாற்றி நொந்து போய் வேதனையில் இருந்த அவரிடம், எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது போல சமயம் பார்த்து என் நண்பன் என்னை போட்டுக் கொடுக்க, மீண்டும் என் அப்பா பள்ளிக்கூட வாசலை மிதிக்க வேண்டியதாயிற்று.

மிகவும் பயந்தபடியே என் அப்பாவிடம், டீச்சர் உங்களை அழைச்சிட்டு வர சொன்னாங்க என்றதும், நான் வேலைக்கு போனதை விட, உன் ஸ்கூலுக்கு வந்த நாள்தான் அதிகம் என்ற திட்டுடன், நாலு சாத்து சாத்தி பள்ளிக்கு அழைத்து வந்தார். என் அப்பா எப்போதும் ஸ்கூல்ல என்ன பிரச்சனை என்று கேட்கவே மாட்டார். ஏன்னா எப்படியும் நான் பொய்தான் சொல்லுவேன்னு அவருக்கு நல்லாவே தெரியும். என்னோட ஐடியா என்னான்னா பள்ளியில நாலு பேரு முன்னாடி சொன்னா அப்பா அடிக்க மாட்டாரு, ஆனா அதையே வீட்ல சொன்னா முதுகு பழுத்துடும். ஒரு வழியா வேலைக்கு பர்மிசன் சொல்லிட்டு, பள்ளிக்கு வந்து ஆசிரியரையும் பாத்துட்டாரு. வாத்தியாருக்கு வீட்ல என்ன பிரச்சனையோ, மானாவரியா போட்டு கொடுத்தாரு, எங்கப்பாவுக்கு என்னை தூக்கி போட்டு மிதிக்கனும் போல வெறி, ஆனா ஸ்கூல் ஆச்சே நம்ம டெக்னிக் நல்லா ஒர்க்கவுட் ஆகி எதுவும் செய்ய முடியாம நின்னாரு. வாத்தி சைக்கிளை ரெண்டு கிலோமீட்டர் தள்ளிகிட்டு போனதை, நிறுத்தி நிதானமா கண்ணீரோட சொல்லி முடிச்சதும், அப்பா சொன்னாரு பாருங்க ஒரு சொல்லு, என்க்கு ஈர கொலயே நடுங்கி போச்சி.

இங்க பாருங்க சார், இவன் உங்க மாணவன், இவன் ஒழுக்கமா இருக்க தான் இந்த ஸ்கூல்லயே சேத்தேன். ஏதாவது சேட்டை செஞ்சான்னா, இந்த கண்ணு ரெண்ட மட்டும் விட்டுட்டு மீதி தோலயெல்லாம் உருச்சிடுங்க, அப்படின்னாரு.

அப்பாவுக்கு ஏன் மேல பாசம் அதிகம் உண்டு என்றாலும், அந்த ஆசிரியர் நிச்சயம் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் அப்படின்னு மிக பெரிய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் சரியான நேரத்தில, சாயந்திரம் வீட்டுக்கு வரலைன்னாலும் நிம்மதியா அவங்க வேலைய பார்க்க விட்டது.

ஆனா இன்னக்கி நிலமை ரொம்ப மோசம். பசங்க மேல இருக்கிற நம்பிக்கை கூட வாத்தியாருங்க மேல இல்லாம போச்சு. எங்கப்பா அப்போதைய ஆசிரியருட்ட சொன்ன வார்த்தைய, இப்ப சொல்லியிருந்தாரு வாத்திங்க அதை ஒரு அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு உப்பு கருவாடே போட்டுருப்பாங்க.

நாட்ல மேற்கத்தைய கலாச்சாரம் வளர வளர மனிதாபிமானம் மற்றும் நேசம் தேஞ்சுகிட்டே வருது. சிறுவர்களிடம் பாலியல் வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும் நடத்தும் பலர் ஆசிரியர்களாகவே இருக்கிறார்கள். பள்ளிகளில் நடக்கும் மரணங்கள் பற்றிய செய்தி மறையும் முன்பாகவே, மாணவனுடன் ஆசிரியை ஓடிப்போன செய்தி வருகிறது. இந்த செய்தி மறையும் முன்பே ஆசிரியரின் மிருகத்தனமான தாக்குதல் பற்றிய செய்தி வருகிறது.

அடிபட்ட மாணவன்

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்கள் அனைவரும் தலைகுனியும் செய்தி ஒன்று வந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் டான் பாஸ்கோ பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டத்திற்க்கு பிள்ளைகள் அறைகளை அழகு படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஷான் தாஸ் என்ற நான்காம் வகுப்பு மாணவன், நுரை பீய்ச்சும் (snow spray) பாட்டிலை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த, பள்ளி உதவி தலைமை ஆசிரியர், அந்த பாட்டிலை வைத்தே தலையில் அடித்திருக்கிறார். மண்டை உடைந்து பள்ளி சீருடை எல்லாம் ரத்தமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான் ஒன்பது வயது சிறுவன்.
கைதான உதவி தலைமை ஆசிரியர்

எது தவறு என்று சொல்லித்தர வேண்டிய ஆசிரியர், இவ்வளவு பெரிய தவறை செய்கிறார் என்றால், ஆசிரியர் பள்ளிகளில் இவர்களுக்கு கற்றுத்தரப்பட்டது என்ன என்ற கேள்வி எழுகிறது. ராணுவ சேர்க்கை போல ஆசிரியர்களுக்கும் நேர்மையான மருத்துவ பரிசோதனையும் தேவை என்பது புலனாகிறது. இல்லையென்றால் ஆசிரியருக்கு பி.பி எகிறும் போதெல்லாம் வகுப்பில் கொலை விழும் சாத்தியம் இருக்கின்றது.

இது போன்ற நிகழ்வுகள் அதிகரிப்பது கண்டு 2010 ம் ஆண்டு Ministry of Women and Child Development அமைப்பு, பள்ளிகளுக்கு சில வரைமுறைகளையும், குற்றத்திற்க்கான தண்டனை பற்றிய அறிக்கையையும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. இதன் படி முதன் முறையாக குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவருட சிறைத்தண்டனையோ அல்லது ரூ.50,000, தண்ட தொகையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று வருடங்கள் வரையிலான தண்டனை மற்றும் ரூ. 25,000 தண்டமும் விதிக்கப்படும்.

இந்தியாவில் சட்டங்களுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை. அதை கடைபிடிக்க வேண்டிய மக்களுக்கும், நடைமுறை படுத்த வேண்டிய காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தான் பஞ்சம்.


அன்புடன் முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்