புதன், 5 செப்டம்பர், 2012

சிங்களர்கள் விரட்டியடிப்பு - ஈழம் கிடைத்தது...?

வேளாங்கண்ணி வந்திருந்த சிங்கள பயணிகள் விரட்டியடிப்பு என்பது தமிழக நாளேடுகளின் சூடான செய்தி. முதல் பக்க செய்தியாக ஏறத்தாழ அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மக்களின் இந்த ஒற்றுமை கண்டு
பெறுமைப்படுவதா ? அல்லது சிறுமையடைவதா ? இந்த சிங்களவர்களை விரட்டியதால் ஈழம் கிடைத்து விட்டதா? விரல் விட்டு எண்ணக்கூடிய தன்னலம் கருதாத  தலைவர்களுள் ஒருவரான திரு வைகோ அவர்களின் கட்சியான மதிமுக வின் கைங்கரியம்தான் இது.


சிங்கள படைகளை தவிர எந்த அப்பாவி சிங்கள மக்களையும் தாக்க விரும்பாத, தமிழர்களின் தானைத் தலைவன்(கவனிக்க தானே தலைவன் அல்ல) பிரபாகரன் அவர்களை ஆதர்ச நாயகனாக கொண்டிருக்கும் திரு வைகோ மற்றும் திரு சீமான் போன்றோர் இவ்வாறு தொண்டர்களை தவறாக வழி நடத்துவது வேதனையானது.

தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக போராடுவதெல்லாம் சரிதான், ஆனால் புனித தலங்களுள் ஒன்றான வேளாங்கண்ணிக்கு பக்தர்களில் ஒருவராக வரும் சிங்கள மக்கள்(கவனிக்க ராணுவத்தை அல்ல) மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற செயல்கள், தமிழர் அல்லாத மக்களிடம் எவ்வகையான எண்ணங்களை உருவாக்கும்? தமிழ் மக்களை கொடுமைப் படுத்துவதாக நம்மால் கூறப்படும் சிங்கள (மற்றும் இந்திய) ராணுவத்திற்க்கும், திரு வைகோ மற்றும் சீமான் படை வீரர்களுக்கும் என்ன வித்தியாசம்?



சிங்கள ராணுவத்திற்க்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க கூடாது, ராஜபக்ச தமிழகத்தில் கால் வைக்க கூடாது என்ற நிலைப்பாடுகளில் உடன்பட முடிந்த என்னால் இந்த சம்பவத்தை ஏற்க முடியவில்லை.

இன்னமும் முள்வேலிக்குள் தமிழினம் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையில் இவ்வாறான செயல்கள் அவர்கள் மீது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல், ஒரு நாள் கிடைக்கப்போகும் விளம்பரத்திற்க்காக செய்யப்படும் இது போன்ற தவறுகள், திரு வைகோ-வுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தமிழர்களுக்குமே ஒரு சறுக்கலாக முடியலாம். வங்க கடலில் உயிருக்கு உத்தரவாதமின்றி ஒவ்வொரு நாளும் போராடும் தமிழ் மீனவர்களுக்கு, இச்செயல் பத்து மடங்கு அதிக ஆபத்தை விளைவிக்கலாம்.


நம்மால் ஒருவருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம், இந்த கூற்று பொதுவாக அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது, ஆனால் உங்களுக்குமா வைகோ ? இதுவரை பெற்ற வெற்றிகள் குறைவாக இருந்தாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்று சக்தியாக இளைஞர்களால் எதிர்பார்க்கப்படும் நீங்கள், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களினால், ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப் படுத்துகிறீர்கள் என்பதை அறிவீர்களா?

இது காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டம் என்று கழக பொதுக்குழுவில் யாராவது உங்களிடம் சொல்லிவிட்டார்களா? ஒரு நல்ல தலைவன் தான் செய்யும் செயல்களுக்கான எதிர்விளைவையும் எதிர்பார்த்தே செய்கிறான் என்று எங்கோ படித்த ஞாபகம். ஒருவேளை இதேப்போல் கச்சத்தீவு மாதா கோயிலுக்கு செல்லும் தமிழர்களை, சிங்களவர்கள் அடித்து விரட்டினால் என்ன செய்வதாக உத்தேசம்?  உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்? வேண்டுமானால் குமரிக்கரையில் நின்று இலங்கையை நோக்கி 1000 வாட்ஸ் ஸ்பீக்கரில் சவால் விடலாமா? நமக்கென்ன அடிபடப் போவது மீனவன் தானே...?




அன்புடன் முத்துக் குமரன்.
 நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்