சனி, 8 செப்டம்பர், 2012

ஜட்ஜஸ் ஒரு பார்வை - I

எனக்கு ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் டி.வி. என்ற ஒரு வஸ்து எங்கள் ஊரில் அறிமுகமானது. இந்திரகாந்தி இறந்த பொழுது எங்கள் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.வி இருந்தது. அதுவும் கருப்பு வெள்ளை. அந்த வீட்டில் இருந்தவர் முற்றத்தில் டி.வி வைத்து பிரதமரின் உடல் தகனத்தை அனைவரும் காண செய்தார். காலம் உருண்டோட ஒவ்வொரு வீடுகளிலும் டி.வி. முளைக்க தொடங்கியது.

சிறிது காலத்தில் கருப்பு வெள்ளை டி.விகள் கலர் டி.வி.யாக மாற தொடங்கியது. எம்.ஜி.ஆர் உடல் அடக்கத்தை எங்கள் வீட்டு என்பீல்டு கலர் டி.வி. யில் ஊரே பார்த்தது. நாங்கள் திருச்சியில் வாழ்ந்ததால் எங்களுக்கு சென்னை தூர்தர்ஷன் தெரியாது. ஆனால் டெல்லி தூர்தர்ஷன் நன்றாக தெரியும். தமிழ் நிகழ்சிகளை காண நாங்கள் நம்பி இருந்தது இலங்கையின் ரூபவாஹினியை மட்டுமே. எங்கள் ஊரில் எல்லா வீட்டிலும் இரண்டிரண்டு ஆண்டெனாக்கள் இருக்கும் ஒன்று தூர்தர்ஷனுக்கு மற்றொன்று ரூபவாஹினிக்கு, பின்னர் கொடைக்கானலில் ஸ்டேஷன் அமைத்த பிறகு நாங்களும் சென்னை தமிழ் நிகழ்சிகளை காண முடிந்தது.

சேட்டிலைட் தொழில்நுட்பம் வளர வளர, தனியார் சேனல்கள் வரிசையாக வர தொடங்கின. நிகழ்ச்சிகளும் வெறும் சினிமா, நாடகம் என்ற நிலை மாறி போட்டி நிகழ்ச்சிகளாக களை கட்ட துவங்கின. சன் டி.வியின் பாட்டுக்கு பாட்டு, ரெகோ நடத்திய ஜோடி பொருத்தம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன.

சேட்டிலைட் சேனல்களின் போட்டியில் புதிய புதிய நிகழ்ச்சிகளின் தேவைகள் அதிகரித்தது. அப்போதுதான் விஜய் டிவி தமிழில் ரியாலிடி ஷோ-க்களை ஆரம்பித்து வைத்தது. அதுவரை விருவிருப்பான போட்டிகளாக இருந்த இந்த நிகழ்ச்சிகள் அழுகாச்சி காவியங்களாக மாறின. இதற்க்கு முக்கிய காரணம் ஜட்ஜஸ் என்று மிக மரியாதையுடன் அழைக்கப்படும் போட்டியின் நடுவர்கள்.

ஒரு நிகழ்ச்சியின் நடுவர்கள் அந்த துறையில் சாதனை புரிந்த பண்பான பெரிய மனிதர்களாக இருந்தவரை எந்த தொல்லையும் இல்லை. ஆனால் மிகச்சிறிய துறை அனுபவத்துடனோ அல்லது ஒரேடியாக ஓரங்கட்டப்பட்டு பொழுது போக்க வழி தெரியாமல் இருப்பவர்களாகவோ, அல்லது சேனல்களின் நிதிநிலைமை காரணமாக குறைந்த விலையில் கிடைத்த மேடை நிகழ்ச்சி அமைப்பாளர்களாகவோ இருக்கும் ஒருவர் நடுவர்களாக வந்த பொழுது தான் சங்கீத நிகழ்ச்சிகள் ஒப்பாரி கச்சேரிகளாகவும், நடன நிகழ்ச்சிகள் ஆபாச கூத்தாகவும் மாறி போயின.

ஜட்ஜஸ்

இது போன்ற நிகழ்ச்சிகள் வெறும் போட்டிகளாக பார்க்கப்படாமல் பணம் காய்க்கும் மரங்களாக சேனல்களின் கண்களுக்கு தென்படுவதால், பங்கேற்பவர்களின் திறமையை காட்டிலும், அவர்களது கண்ணீர் அதிகம் வியாபாரமாக்கப்படுகிறது. புறணிப் பேசியே வளர்ந்ததால் அடுத்தவர் துன்பம் நமக்கு இன்பமாக இருக்கிறது. நாம் விரும்பி பார்த்து டி.ஆர்.பி ரேட் ஏறிவிடுவதால், சேனல்களுக்கு கண்ணீர் அனுதினமும் தேவைப்படுகிறது. ஏதோ ஒரு நாள் யாராவது உணர்ச்சிவயப் பட்டு அழலாம், தினம் தினம் கண்ணீருக்கு எங்கே போவது ?. இதற்க்கு தான் மேற்கூறிய மதிப்பு மிக்க ஜட்ஜஸ் தேவைப்படுகிறார்கள்.

ஒவொரு போட்டியிலும் குறைந்தது இரண்டு முதல் மூன்று ஜட்ஜஸ் இருக்கிறார்கள். மேலும் ஒரு சிறப்பு விருந்தினர், அவரும் சமய சந்தர்ப்பத்தை பொருத்து மதிப்பிடுவார். இதில் ஒரு ஜட்ஜ் குற்றம் குறை காண, மற்றொருவர் ஆடை அணிகலன்கள், மேக்கப், மற்றும் நடை உடை பாவனைகள் பற்றி விமர்சிக்க, மூன்றாமவர் மனதை குத்தி கிழித்து காயப்படுத்த (இவர்தான் கண்ணீருக்கு இன்சார்ஜ்). இதில் சிறப்பு நடுவர், ஜட்ஜஸ்க்கும் போட்டியாளர்களுக்கும் இடையே வார்த்தை தடிக்கும் பொழுது பஞ்சாயத்து பேச, ஆக இது திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு ரியாலிடி ஷோ. நமக்கும் இது ஏமாற்று வேலை என்று தெரியும் ஆனாலும் ரசிக்கிறோம். நாம் ஏமாறுவதாக நடிக்கிறோம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உண்மையானவர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்த பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமானதால் மீதி அடுத்த பதிவில்...

இரண்டம் பாகம். http://muthuchitharalkal.blogspot.in/2012/09/ii.html

அன்புடன் முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்