வியாழன், 25 ஏப்ரல், 2013

முரட்டு வைத்தியம்

கல்நார் ஓடுகளை கொண்ட பெரிய வரவேற்பறை, சுவற்றின் ஓரமெங்கும் வெற்றிலை சாற்றின் ஓவியங்கள். அறையின் நடுவே சிமெண்ட் பெஞ்சுகள். ஆங்காங்கே சிறுவர் பெரியவர் பேதமின்றி முக்கல் முனகல்கள் ஓசைகள்.
வரவேற்பறையை அடுத்து ஒரு சிறிய அறை. நுழையும் முன் ஒரு பெரிய அறிவிப்பு பலகை. வழக்கமாக டிவியில் இரவில் ஒளிபரப்பப்படும் லேகியம், சித்தமருத்துவம், எண்கணிதம்  சீரியல்களுக்கு முன் காட்டப்படும் “முன் அறிவிப்பு” சிலைடு போல் அந்த பலகையில் “இங்கு கொடுக்கப்படும் சிகிச்சை சற்று கடினமான முறையில் இருக்கும். ஆகவே நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்” என்ற அறிவிப்பு. மேலும் வாகன நிறுத்துமிடத்தில் எழுதியிருப்பது போல் “பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது ” என்ற அன்பான கோரிக்கை வேறு.


சிறிய அறையினுள் ஒரு மேசையின் மீது முட்டை அடுக்குகள் அதை விற்பதற்கு ஒரு பணிப்பெண். அதை தாண்டி மற்றுமொரு விசாலமான அறை, அந்த அறையின் உள்ளே சற்றே பெரிய ஐந்தாறு டீக்கடை பெஞ்சுகள். அறையின் ஒரு மூலையில் மங்கிய வண்ண வேட்டிகள் கிழித்து கொட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெஞ்ச் அருகிலும் ஒரு சிறிய மேசை அதில் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் துவையல் போல் ஏதோ இருந்தது. ஒரு மேசைக்கு ஒரு உதவியாளர் ஒட்டுமொத்தமாக ஒரு டாக்டர். டாக்டர் என்று அழைப்பதனால் அவர் எம்.பி.பி.எஸ் படித்தவர் என்று பொருளல்ல. தலைமுறை தலைமுறையாக வைத்தியம் செய்வதால் அவர் டாக்டர் அவ்வளவுதான். இதுதான் சென்னையில் உள்ள ஒரு புகழ் வாய்ந்த புத்தூர் கட்டு வைத்திய கிளை.  இது வரை புத்தூர் கட்டு என்ற ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் தரிசனத்திற்கு ஒரு வாய்ப்பு.

என் நண்பருக்கு கை எலும்பு முறிவுக்கு கட்டு போட உடன் சென்றதால் கிடைத்த அனுபவம். டாக்டர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். ஒவ்வொரு பெஞ்ச் அருகிலும் சென்று அவர்களுடைய எக்ஸ்ரேயை வாங்கி நொடியில் தூக்கி பிடித்து பார்த்து அடிபட்ட இடத்தில் கையை வைத்து தடவி ஒரு முறுக்கு முறுக்கி இடம் மாறி இருந்த எலும்புகளை நேராக்கி சட்டென பச்சை துவையலை எடுத்து அந்த இடம் முழுவதும் தேய்த்து ( ஒருவேளை கீழே சிந்தினால் அதே கையால் அதை வழித்து மீண்டும் தேய்த்து) மேலே பஞ்சு வைத்து விட்டு டாக்டர் அடுத்த நோயாளியை அட்டெண்ட் செய்ய கிளம்பி விடுகிறார் அதே கழுவாத கையுடன். அதற்குள் நோயாளி கதறி மயக்கமடையும் நிலைக்கு சென்றுவிடுகிறார். அடுத்து உதவியாளர் முட்டை வெள்ளைக்கருவுடன் மீண்டும் பச்சை மற்றும் மஞ்சள் துவையலை கொஞ்சம் கரைத்து பஞ்சு முழுவதும் நனையுமாறு பூசி, சிவப்பு துவையலை லேசாக ஊறுகாய் போல் ஆங்காங்கு அப்பி, வேட்டி கிழிசலை அதன்மேல் சுற்றி, மூங்கில் பட்டைகளை வைத்து மீண்டும் வேட்டி கிழிசல் போர்த்தி கட்டை பூர்த்தி செய்கிறார்.


கட்டு போட்டுக்கொண்டவர் உடனடியாக இடத்தை காலி செய்து அடுத்தவருக்கு இடம் விடவேண்டும். வீல்சேர் கிடையாது, ஸ்ட்ரச்சர் கிடையாது, ஏன் ஒரு மேட்ரஸ் கூட கிடையாது, காலில் கட்டு போடபட்டிருந்தால் உறவினர்கள் அலேக்காய் நோயாளியை தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு செல்ல வேண்டியதுதான். சுகாதாராம் என்றால் கிலே என்ன விலை என்று கேட்கும் இடமாக இருந்தாலும் கூட்டம் அலை மோதுகிறது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கதறலை கேட்கும் போது இது போன்ற சிகிச்சைக்கு அழைத்து வந்த அவர்கள் பெற்றோர்கள் கன்னத்திலேயே ஓங்கி நாலு அறை விடவேண்டும் போல் தோன்றுகிறது. என்ன செய்வது ஆங்கில மருத்துவம் அன்றாடங்காய்ச்சிகளுக்கு இல்லை என்ற உண்மை உறைக்கும் போது ஜனநாயகத்தின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும், எதையும் தட்டிக்கேட்க வக்கற்ற நம்மை போன்ற நடைபிணமான சமூகத்தின் மீதும் கட்டுக்கடங்காத கோபம் எழுகிறது.

என் நண்பருக்கு அடிபட்ட இடத்தை விட்டு விட்டு, சிறுவயதில் முடங்கி போன விரலை பிடித்து முறுக்கிக் கொண்டு இருக்கும் போது, டாக்டர் என்று அழைக்கப்படுபவருக்கு உண்மையிலேயே எக்ஸ்ரே பார்க்க தெரியுமா என்று சந்தேகமும் வந்தது. எந்த பழுத்த ஆங்கிலேய மருத்துவரும் இவ்வளவு விரைவாக எக்ஸ்ரேவை சோதித்து நான் கண்டதில்லை. அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரின் கால் எலும்பு வளைந்தே கூடியிருக்கிறது. அவர் வீக்கம் இன்னும் குறையவில்லை டாக்டர் என்கிறார். முடிஞ்சவரை  பண்றோம் இதுக்கு மேல நான் என்னப்பா பண்ண முடியும் ? வேணும்னா ஏதாவது ஆஸ்பத்திரிக்கு போய் பாரேன் என்கிறார் இயலாமையுடன். மருத்துவமனைக்கு செல்லும் அளவு பணமிருந்தால் அவர் ஏன் இங்கே வரப்போகிறார். இதையும் மீறி புத்தூர் கட்டுதான் நிரந்தரமாக பலனளிக்கும் என்று நம்பி இங்கு வருபவர்களும் உண்டு. ஒரு மார்வாடி தன் மகளுடன் வந்திருந்தார். அவரிடம் கேட்டதற்கு, ஆங்கில மருத்துவத்தில் விரைவில் சரியாகிவிடுகிறது ஆனால் எலும்புகள் பலமாகவில்லை அதனால் இந்த முறை உடைந்த போது இங்கு வந்திருக்கிறோம் என்றார். ஒருவேளை முட்டை, பச்சிலை வைத்து கட்டுவதால் கட்டபொம்மன் கோட்டை போல உறுதியாக இருக்கும் என்று நினைத்து விட்டாரோ என்று தெரியவில்லை.  இந்த முரட்டு மருந்துவ முறை எனக்கு பயத்தை கொடுத்தாலும் ஏழைகளுக்கு நிச்சயம் ஒரு நல்ல சேவைதான். என் நண்பருக்கு ஒரு கட்டுக்கு 400 ரூபாய் ஆனது. இதுவே தனியார் மருத்துவரிடம் சென்றிருந்தால் அவரது வீட்டை அடமானம் வைத்திருக்க வேண்டியதுதான். ஆனால் இந்த முரட்டு வைத்தியத்தை பொறுத்தவரை சரியாவதும், தவறாவதும் அவரவர் யோகத்தை பொறுத்தது. நோயாளிகள் அனைவருக்கும் சரியாகட்டும் என்று வேண்டிக்கொள்வதை தவிர நம்மால் செய்ய முடிந்தது வேறொன்றும் இல்லை.


அன்புடன்
முத்துக் குமரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்