திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சென்னையில் சாவுக்கூத்து

 சமீபத்தில் ஒரு ஊர்வலத்தை காண நேரிட்டது. இது விழா காலமாதலால் ஏதோ சாமி ஊர்வலம் என்று நினைத்த எனக்கு அருகில் வரும்போதுதான் அது பிண ஊர்வலம் என்று தெரிந்தது, சென்னையை பொறுத்தவரையில் சாமி ஊர்வலமாக இருந்தாலும் சாவு ஊர்வலமாக இருந்தாலும் தாரை தப்பட்டைதான் இசை. எங்கள் ஊரில், நான் கண்டவரை சாமி ஊர்வலத்திற்க்கு மேள தாளம், நாதஸ்வரம் மட்டுமே பயன் படுத்த பட்டது (இப்போது எப்படி என்று தெரியவில்லை).
சவத்திற்க்கு பின்னாலும் முன்னாலும் வந்த கூட்டத்தையும், ஆட்டத்தையும் பார்க்கும் பொழுது அது ஊரடித்து உலையில் போட்ட ஒரு நல்லவரின் இறுதி பயணம் என்று தெரிந்தது (ஒருவரின் இறப்புக்குப் பின் நிறைகளை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுக்கு தெரிந்தாலும், உணர்வுக்கு...! ).

ஊரில் மயானம் மக்கள் வாழ்விடங்களில் இருந்து தனியாக ஊருக்கு வெளியே அமைந்திருக்கும். ஆனால் நகரங்களில் அதற்கான வாய்ப்பு குறைவு காரணம் இட பற்றாக்குறை. சென்னையில் சொல்லவே வேண்டாம். நுங்கம்பாக்கத்தை சுற்றியுள்ள இடங்களில் இருந்து அனைத்து பிணங்களும் லயோலா கல்லூரியை ஒட்டியுள்ள மின் மயானத்திற்குதான் கொண்டு வரப்படும்.  அதற்காக போக்குவரத்து நெரிசல் நிறைந்த நெல்சன் மாணிக்கம் ரோட்டில் தான் ஊர்வலம் பயணிக்க வேண்டும். ஊர்வலத்தில் இறந்தவரின் சில அடிப் பொடிகள் மித மிஞ்சிய போதையுடன் நடக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டே நடந்தனர். அதைக் கண்ட மற்றவர்கள் அவர்கள் ஆடுவதாக நினைத்துக் கொண்டு தானும் கூட சேர்ந்து ஆடிக் கொண்டே வந்தனர்.

தமிழன் இசையுடன் வாழ்பவன். எந்த ரிகர்சலும் இல்லாமல் ஆடிய அத்துனை பேரும் தாளத்திக்கு ஏற்ப வேகமாகவோ, மெதுவாகவோ ஆடிக் கொண்டிருந்தனர். அந்த ரோட்டின் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆங்காங்கே காவலர்கள் நிற்பது வழக்கம். இறந்தவர் யாராக இருந்தாலும் காவலர்களை தாண்டிச் செல்லும் போது அந்த காவலர்கள், தங்கள் தலையில் உள்ள தொப்பியை கழற்றி மரியாதை செலுத்துவர். ஆனால் ஆடிச் செல்லும் அடிப்பொடிகள் அப்போது தான் அவர்களை பார்த்து வேகமாக விசில் அடித்து, கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டே சென்றனர்.

காவலர்கள் ஊர்வலத்தை ஒரு ஒரமாக அனுமதித்து, மற்றொரு புறமாக போக்குவரத்தையும் அனுமதித்திருந்தனர். ஆடிக் கொண்டுச் சென்ற கும்பல் இடைஇடையே வேட்டுகளையும் தீர்த்தது. வேட்டு ஒலி கேட்டு பைக்கில் அமர்ந்திருந்த குழந்தை வீரிட்டழுதது. குழந்தையின் அழுகுரல் கேட்டதும் கும்பலுக்கு கொண்டாட்டம், மீண்டும் சில வேட்டுகள் வீசப்பட்டன. சாலையில் வாகனத்தில் சென்ற பெண்கள் எங்கே தன் மீது விழுந்து விடுமோ என பயந்து ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டனர். பெண்களை கண்டவுடன் மீண்டும் கும்பலுக்கு கொண்டாட்டம் பிணத்தின் மீதிருந்த மாலைகளில் இருந்த பூக்களை பிய்த்து அவர்கள் மீது எறிந்தனர். ஆட்டத்தில் பிசியாக இருந்த ஒருவர் சட்டென லுங்கிக்குள் இருந்த டவுசருக்குள் கைவிட்டு பாட்டிலை எடுத்து உற்சாகத்தை ரீசார்ஜ் செய்து கொண்டார். சாலை ஓரத்தில் வாகனத்தில் சென்றவர்களை கண்டவர், பாய்ந்து சென்று ஒரு காரின் முன்புறத்தை ஓங்கி அடித்து, கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசி, இறந்தவருக்கு தான் ஒரு விசுவாசி என்றும், ”அக்மார்க்” தரம் கெட்டவன் என்று நிரூபித்தார். காவலர்கள் அருகில் இருந்தாலும், அவனிடம் பதமாக பேசி காரை மீட்டு அனுப்பினர்.

இதைக் கண்ட என் மனதில் சில கேள்விகள்...

கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களில் ஒருவரின் கடைசி ஊர்வலம் மிக அமைதியாக நடக்கின்றது. ஆனால் இந்து மதத்தில் ஏன் இப்படி?

பொதுமக்களில் ஒருவர் யாராவது ஒரு காவலரை திட்டினால், கும்பலாக சேர்ந்து கொண்டு கிண்டி கிழங்கெடுக்கும் காவலர்கள், காதில் கேட்க கூசும் வார்த்தைகளை வீசும் இது போன்றவர்களை கண்டுக்கொள்ளாதது ஏன் ?

அரசு அனுமதித்துள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு தள்ளாடியபடி வரும் குடிகாரரை பிடித்து மிரட்டி பணம் பறிக்க இருட்டு சந்தில் பதுங்கி நிற்கும் காவலர்கள், பொதுமக்கள் நடுவே, நட்ட நடு சாலையில் தைரியமாக சரக்கடித்து அலம்பல் செய்யும் ஒருவனை தூக்கி உள்ளே வைக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் ?

பண்டிகை நாட்களில் தெருவில் ஊசி பட்டாசு கொளுத்தும் பள்ளி சிறுவர்களை எச்சரித்து அனுப்பும் போலிசார், போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு சாலையில் சர்வ சாதாரணமாக வேட்டு போடும் கிறுக்கனை கேள்விக்கூட கேட்காதது ஏன்?

சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் அசால்ட், ஈவ் டீசிங் கேஸ் போடும் போலிசார், பொதுமக்களுக்கு இடையூறாக, அடிக்க பாயும் ஒருவனை பதமாக பேசி அனுப்பி வைப்பது ஏன் ?

ஒரு சவ ஊர்வலம் சென்றால் வேறு யாரும் அந்த வழியாக செல்லக்கூடாதா?

சவ ஊர்வலத்தில் போலிசார் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற துணிச்சலில் ஆடும் இவர்களை ஒருமுறையாவது நாலு சாத்து சாத்தினால்தான், இந்த கொடுமைகள் ஒழியும்.வேதனையுடன்
முத்துக் குமரன்.

நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்