திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கானக்குயில்கள் - 2 : நான்சி அஜ்ரம்

கானக்குயில்கள் பகுதியை துவங்க முடிவுசெய்தவுடன் முதலில் எனக்கு நினைவில் வந்தது அரபு தேசத்து கானக்குயில் நான்சி அஜ்ரம். நான்சி அஜ்ரம் எனக்கு அறிமுகமானது 2004 ஆம் ஆண்டு. ஒரு நாள் வழக்கம் போல் வெட்டியாய் வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கான சரஸ்வதி. அன்று அருகில் இருந்த அனைவரையும் அழைத்து காட்டி ஒரே நாளில் பேக்கு என்று பெயரெடுத்தவன் நான். அவளோ உருது-ல பாடுறா, எல்லாம் புரிஞ்ச மாதிரி, எல்லாரையும் கூப்பிட்டு காட்டுற... என் நன்பன் கேட்டான். ம்...ஹூம்.. கழுதைக்கு தெரியுமா கற்பூர நறுமணம்.



நான்சி அஜ்ரம் 16.05.1983 ல் கிழக்கு பெய்ரூட் நகரில் லெபனான் நாட்டில் பிறந்தவர். இவரின் சகோதரர் ஒரு பாடகர் சகோதரி ஒரு நடிகை. நான்சி எட்டு வயதிலேயே லெபனான் நாட்டு தொலைகாட்சியான டெலிலிபன்(Teleliban) மற்றும் LBC(Lebanese Broadcasting Corporation) நடத்திய இசை போட்டிகளில் கலந்து கொண்டவர். அவரது 12-ம் வயதில் 1995 ம் ஆண்டு Future Tv-ல் நடத்தப்பட்ட இசைப்போட்டியில் கலந்து கொண்டு, தரப்(Tarab) பிரிவில் தங்கம் வென்றார். தரப் என்பது வாத்திய இசையுடன் கூடிய கர்நாடக இசையில் பாடப்படும் ஆலாபனை போன்றது. பின்பு இசை நன்கு கற்று லெபனான் தொழில்முறை பாடகர் கூட்டமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார். இந்த அமைப்பில் சேர அவருக்கு வயதில்லை என்றாலும் அவரது இசை புலமையின் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

நான்சி தனது முதலாவது பாடல் தொகுப்பை 1998 ஆம் ஆண்டு Mihtagalak (I need you) என்ற பெயரில் வெளியிட்டார். அது மிகப்பெரிய தோல்வியடைந்தது. அடுத்த தொகுப்பை 2001 ம் ஆண்டு Sheel Oyoonak Anni(Stop looking at me) என்ற பெயரில் வெளியிட்டார். இதுவும் பெரிதாக விற்பனையாகவில்லை. இந்த இரண்டு பாடல் தொகுப்பும் தரப் வகை இசையாலானது, இந்த தோல்வியின் காரணமாக அடுத்த ஒரு வருடத்துக்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், அவருக்கு ஜிஜி லமாரா(Jiji Lamara) என்ற தயாரிப்பாளரின் தொடர்பு கிடைத்தது. அவருடைய உதவியினால் 2003 ம் ஆண்டு Ya Salam(How Beautiful) என்ற ஆல்பம் வெளியிட்டார். இது அரபு தேசத்தில் மிக அதிகமாக விற்பனையாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. இதனால் 2003ம் ஆண்டு சிறந்த அரபு பாடகியாக தேர்தெடுக்கப்பட்டார் (Best Arab singer 2003).


அவரது நான்காவது ஆல்பம் Ah w Noss("Yes, and a half") 2004 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து அரபு இசை உலகில் அவரை உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க வைத்தது.



அடுத்து வெளியான Lawn Ouyounak"(The Color of Your Eyes) என்ற மணமக்களை பற்றிய ஆல்பம், லெபனான் நாட்டு திருமணங்களின் சடங்கு பாடலாகி போனது.



2005 ல் கோகோ கோலா நிறுவனம் வட ஆப்பிரிக்க மற்றும் மேற்காசிய விளம்பர தூதராக நான்சியை அறிவித்து. அதே வருடம் நகை கடை (Damas Jewelry) விளம்பர மாடலாகவும் ஒப்பந்தம் ஆனார்.

2008 ல் வெளியான Betfakkar Fi Eih என்ற ஆல்பம் அவருக்கு இசையுலக விருதை(World Music Award) பெற்றுத்தந்தது. அதே வருடம் அவரது காதலரை மூன்றாண்டு காதலக்குப்பின் கரம் பிடிததார்.





2009 ல் அவர் வெளியிட்ட (Efta7 Albak Tefra7)  என்ற பாடல் கோகோ கோலா நிறுவனத்திற்க்கு மிக பிடித்து போனதால், 2010 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு கோகோ கோலா விளம்பர படமாக அந்த பாடலை வெளியிட்டது.

2009 ம் ஆண்டில் ரொடானா (Rotana) சஞ்சிகை Most Beautiful MoM 2009 என்ற விருது வழங்கியது.

நான்சி 2006 ம் ஆண்டில் இருந்து Nancy Ajram's Charity Organization என்ற சேவைமையத்தை ஏழை மக்களுக்காக நடத்தி வருகிறார். இவரது மகளுக்காக இவர் இயற்றிய பாடலை UNICEF க்கு பரிசளித்திருக்கிறார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்ற நான்சி, வாழ்க்கை போரில் ஒரு ஜான்சி.
 


அன்புடன்
முத்துக் குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்