வெள்ளி, 18 ஜனவரி, 2013

காதலின் சுகம்சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்...

அவசர அவசரமாக டேபிளில் கிடந்த காகித கற்றைகளில் தேடி செல்போனை எடுத்து அழைப்பை ஏற்றாள்.

ஹாய் யசோதா... ஐ வாண்ட் டு டாக் டு யூ ஆஃப்டர் ஆஃபிஸ் ஹவர்ஸ்.

எனிதிங் சீரியஸ்... அசோக்?

லிட்டில்.


யசோதாவுக்கு மனம் முழுவதும் கலக்கம். காலையில் அவன் வந்ததிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கண்கள் சிவந்திருந்தது,  அவன் சரியாக பேசவில்லை. ஏதோ பிரச்சினை போல சரி அவனாக வந்து சொல்லட்டும் என்று விட்டு விட்டாள்.

யசோதாவின் டீம் லீட் அசோக். அழகானவன். எல்லோரிடமும் சிரித்து பேசி நாசூக்காக வேலை வாங்குபவன். எந்த ஒரு பிரச்சனையையும் இவன் அணுகும் விதமே அலாதிதான். பலவிதங்களில் யோசித்துதான் முடிவெடுப்பான். முடிவெடுத்ததில் தவறு நேர்ந்தால் தடாலடியாக மன்னிப்பு கேட்பான். இவனை புரிந்துகொள்வது சற்று கடினமாக அவளுக்கு தோன்றியது. யசோதா அவனைவிட இரண்டு வயது இளையவள். அவனை ஒரு சக வேலையாளாக நினைத்து பழக ஆரம்பித்தவள், பின்னர் அவன் ஒவ்வொரு செயல்களையும் ரசிக்க ஆரம்பித்தாள். பின்னர் அவனையே நினைத்து உருக ஆரம்பித்தாள்.

ஒரு சுபயோக சுபதினத்தில் கேண்டினில் சாப்பிடும் போது அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள், அசோக் ஒரு பொண்ணு உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா உன் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்...?

அது அந்த பெண்னின் பழக்க வழக்கங்களை பொறுத்திருக்கும். கேள்வியின் வீரியம் புரியாமல் பதில் சொன்னான்.

ஒருவேளை அந்த பெண் நானா இருந்தா... உன் ரியாக்‌ஷன் எப்படியிருக்கும்? இந்த தடாலடி கேள்விக்கு திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

ஏய் லூசு எது எதுல விளையாடுறதுன்னு தெரியாது உனக்கு...?

ஐ ம் சீரியஸ் அசோக்.

சிறிது நேரம் அமைதியா இருந்தவன். முதல்ல என் வீட்டப்பத்தி தெரிஞ்சுக்க. எங்க வீட்ல நான் என் அம்மா, அப்பா, தங்கை நாலுபேர் தான். ஆனா உறவுக்காரங்க நிறைய. என் அப்பாவுக்கு என் தங்கை மேல உயிரு... என் அம்மாவுக்கு நாந்தான் எல்லாமே. நீயும் நானும் வேற வேற ஜாதியா இருந்தாலும் என்னால என் அம்மாவை சமாதானப்படுத்தி உன்ன ஏத்துக்க வச்சிட முடியும். ஆனா அது என் தங்கைய வாழ்க்கைய பாதிக்க கூடாதுன்றதுல அப்பா கவனமா இருப்பாரு. அதுனால அவளுக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும், என்னை நீ கல்யாணம் பண்ணிக்கன்னு தொல்லை செய்யக்கூடாது. இது உனக்கு சம்மதம்னா சொல்லு என்றான்.

யசோதாவுக்கு விண்ணில் பறப்பது போன்ற உணர்வு. ஆஹா இதுதான் காதலா? இதுவரை இல்லாத கூச்சம் இப்போது அவனை பார்க்கும் போது வந்தது. சாப்பாட்டு தட்டை பார்த்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

நான் கேட்ட கேள்விக்கு மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா? என்றான்.

ம்... முனகல் மட்டுமே பதிலாக வந்தது. அன்றிலிருந்து இரண்டு வருடகாலம் ஓடியதே தெரியவில்லை. யசோதாவுக்கு வீட்டிலிருந்து திருமணத்துக்கான அழுத்தம் வந்து கொண்டிருந்தது. மெதுவாக அசோக்கை நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்குள் அவனது தங்கை படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தாள். சரி இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்துக்கொள். அதற்குள் வீட்டில் பேசி இதற்கொரு வழி செய்கிறேன் என்றான்.

ஒரு மாதம் விரைவாக ஓடியது. யசோதாவின் அப்பா ஊரிலிருந்து சில வரன்களின் புகைப்படங்களுடன் நேராக  ஹாஸ்டலுக்கே வந்துவிட்டார். அவரை சமாளித்து அனுப்ப அவளுக்கு போதும் போதும் என்றானது. இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது என்ற சூழலில் அசோக்கிடம் அழுது அரற்றினாள். சரி.. விடு இன்றிரவே அம்மாவிடம் பேசுகிறேன் என்றான்.

அன்றிரவு அசோக் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான். அப்பா இவதான் படிச்சு முடிச்சிட்டாளே...,  இவளுக்கு எப்ப கல்யாணம் பண்ற ஐடியால இருக்கீங்க...?

ஏம்பா உனக்கு ஏதாவது அவசரமா...? அப்பாவின் கேள்வியில் நிலைகுலைந்து போய் அம்மாவை பார்த்தான். அவன் கேக்குறதுல என்ன தப்பு...? இவளுக்கு முடிச்சாதானே அவனுக்கும் செய்யமுடியும் அம்மா சொன்னாள்.

இங்க வாம்மா மகளை அழைத்தார். சொல்லு உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்? என்ன படிச்சிருக்கனும்? உன் கண்டிஷன சொல்லு அப்படியே பார்த்திடுறேன்.

..... மௌனமாக நிற்க்கும் மகளை நிமிர்ந்து பார்த்தார். அவள் கண்ணில் கண்ணீர். வெல வெலத்துப்போனார் அப்பா.

ஏம்மா ஏன் அழறே... சொல்லிட்டு அழு.

நான்... நான்.... நம்ம... கோபு மாமாவதான் கல்யாணம் செஞ்சுக்குவேன். இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்பா... ஓ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். எல்லோரும் சிலையென நின்றார்கள்.

சில நிமிட அமைதியை அப்பா தொண்டையை கணைத்து கிழித்தார். சரி அவனும் நம்ம சொந்தம்தானே. யாருக்கோ எங்கயோ குடுக்குறதவிட பக்கத்துல தெரிஞ்ச இடத்துல குடுத்தா எப்ப வேணும்னாலும் போய் பார்த்துக்கலாம் இல்லையா..? என்றார். அப்பா, மகள் பாசத்தில் அவரை சமாதானப்படுத்தி கொண்டது அசோக்குக்கு புரிந்தது. எப்படியோ நமக்கு வழிவிட்டால் சரி என்று நினைத்துக்கொண்டான்.

அசோக் அந்த செல்போனை எடு. கோபு அப்பாக்கிட்ட பேசிடுவோம். அப்பா செல்போனை எடுத்துக்கொண்டு ரூமுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர் டேய் அசோக்கு உன் கவலையும் ஒழிஞ்சதுடா.. என்றார். அசோக்குக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்றீங்க நீங்க என்றாள் அம்மா. கோபு அப்பாவுக்கு நம்ம வீட்டு சம்பந்தம் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் அதே சமயத்துல கோபு தங்கையையும் நம்ம அசோக்குக்கு கொடுக்கனும் நினைக்கிறாரு. பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தா நமக்கு பின்னால அவங்க ஒருத்தருக்கொருத்தர் அனுசரனையா இருப்பாங்கன்னு நினைக்கிறாரு. எனக்கும் அதுதான் சரின்னு பட்டுது. சம்மதம் சொல்லிட்டேன் என்றார்.

அசோக்குக்கு தூக்கிவாரி போட்டது. அப்பா என் முடிவை கேட்காம எப்படி நீங்க சம்மதிக்கலாம் என்றான். இதுவரை உன்ன கேட்டுதான் எல்லாம் செஞ்சனாப்பா என்றார்.

ஆனா நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன் அவளை விட்டு என்னால வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்றத நினைச்சு பாக்க முடியாது.

ஒரு ஆம்பளயால எந்த சூழ்நிலையிலும் வாழ்ந்திட முடியும். ஆனா தனியா எல்லாரையும் பிரிஞ்சு வேற ஒரு வீட்டுக்கு போற பொண்ணு உணர்ச்சி வசப்பட்டு சட்டுன்னு ஏதாவது முடிவு எடுத்துட்டா என்ன பண்றது. உன் தங்கைய பத்தி யோசிச்சு பாரு.

நான் காதலிக்கிறதும் ஒரு பொண்ணுதான்றத நீங்க நினைச்சு பாருங்க.

நான் ஏண்டா எவன் வீட்டு பொண்ணயோ நினைச்சு பாக்கனும். என் பொண்ணோட வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்.

அததான் நானும் சொல்றேன்... உங்களுக்கு உங்க மகளோட வாழ்க்கை மட்டும்தான் முக்கியம், மகனோட வாழ்க்கையில்லை. உங்களுக்கு நான் முக்கியமில்லன்னா, நான் ஏன் உங்கள முக்கியமா நினைச்சு நான் காதலிச்ச பெண்ண கைவிடனும்.

அப்பாவுக்கு பீபீ எகிறியது... நெஞ்சைப்பிடித்து கொண்டு நாற்காலியில் சரிந்தார்.

அவனது அம்மா கதறிக்கொண்டு ஓடி வந்தாள். அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.

ஐ.சி.யூ வுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மகனிடம் வந்தாள் அம்மா. அசோக்கு உன்ன படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாரு அந்த மனுஷன். இப்படி ஒரேடியா கொல்ல பாத்திட்டியேப்பா... இருவத்தெட்டு வருசமா கூடவே இருந்த அப்பாவ விட... ரெண்டு வருச உறவு உனக்கு பெருசா போச்சாடா.. தயவு செஞ்சு என் தாலியறுத்து மூலையில உக்கார வச்சிடாதப்பா...

அம்மாவின் வார்த்தை ஒவ்வொன்றும் ஈரக்குலையை அறுத்தெடுப்பது போல் வலித்தது.

 சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்... அவசர அவசரமாக போனை ஆன் செய்தாள்.

இட்ஸ் சிக்ஸ் தேர்ட்டி. ஷல் வீ கோ நௌ...?

யா... ப்ளீஸ் வெய்ட் அவுட்சைட், ஐ வில் ஜாயின் வித் யூ இன் ஃப்யூ மினிட்.

வேக வேகமாக டாய்லெட் சென்று முகம் கழுவி டச் அப் செய்து கொண்டு வெளியே வந்தாள்.

இருவரும் வழக்கமாக சந்திக்கும் காஃபி டே க்கு வந்தனர்.


என்ன அசோக் பிரச்சினை...? ஏன் கண்ணெல்லாம் சிவந்திருக்கு ?

நடந்ததையெல்லாம் ஒன்று விடாமல் சொன்னான்.

சிறிது நேர அமைதிக்குப்பின்...

சரி நீ என்ன முடிவு எடுத்திருக்க...?

இது சரியா வராது யசோதா. எங்கப்பாவோட சாவுல, எங்கம்மாவோட சோகத்துல, என் தங்கையோட சாபத்தில, நம்ம வாழ்க்கை ஆரம்பிச்சா, எப்படி நல்லா இருப்போம் சொல்லு. என்னால முடிஞ்ச வரைக்கும் போராடி பார்த்திட்டேன். இது இனிமே நடக்காதுன்னு தெரியும் போது என்ன செய்ய முடியும். என்னோட முடிவு நிச்சயம் உனக்கு அதிர்ச்சியாதான் இருக்கும். ஆனா பிராக்டிக்கலா யோசிச்சுப்பாரு. உலகத்திலேயே நாம மட்டும்தான் காதலர்களா என்ன? இது மாதிரி கதை எத்தனையோ பேர் கிட்ட இருக்கு அவங்க எல்லாம் மறந்துட்டு வாழ்ந்துகிட்டுத்தான் இருக்காங்க. காலம் ஒரு சிறந்த மருந்து. இன்னக்கி வலியா தெரிகிறது, சில வருஷத்துக்கு பிறகு நகைச்சுவையான விஷயமா கூட இருக்கலாம். பத்தாவது முடிச்சி நண்பர்கள் எல்லாம் வேற வேற படிப்பு எடுத்து படிக்க போறப்ப நிச்சயம் எல்லார் மனசிலயும் நண்பர்களை பிரிகிற ஏக்கம்,சோகம் எல்லாம் இருக்கும். ஆனா இப்பவும் அது இருக்குதா என்ன...? நம்ம இரண்டு வருட நட்பு, இரண்டு பேருக்குமே நிச்சயம் ஒரு சுகத்தை கொடுத்துருக்கு. காதலிக்காத பலபேருக்கு, அதை புரிஞ்சிக்கிற, அதோட சுகத்த தெரிஞ்சிக்கிற வாய்ப்பில்லை. நமக்கு அதையும் மீறி அதோட சோகத்தயும் தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. நாளைக்கு உன் பிள்ளைகளுக்கோ இல்ல என் பிள்ளைகளுக்கோ இப்படி ஒரு நிலை வந்தால், என் அப்பாவுக்கு புரியாத இந்த வலி நிச்சயம் நமக்கு புரியும். நீயே யோசிச்சு பாரு என் முடிவு சரிதான்னு புரியும்.

நீ ரொம்ப நல்லா யோசிக்கிற அசோக். எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட இந்த முடிவெடுக்கிற திறமையும் அதை மத்தவங்கள ஏத்துக்க வைக்கிற திறமையும் தான். ஆனா ஒரு சின்ன வருத்தம் என்னன்னா அதுக்கு நீ ரெண்டு வருசம் எடுத்துக்கிட்ட. இந்த ரெண்டு வருசத்துல நான் உன் கூட கனவுலயே டூயட் பாடி, கல்யாணம் பண்ணி, பிள்ளையும் பெத்துக்கிட்டேன். இதையெல்லாம் நீ சொன்ன, காலம், மாத்திடும்னு நான் நம்பல. அப்ப மட்டும் இல்ல இப்பவும் நீ உன் அம்மா, உன் அப்பா, உன் தங்கை அவங்கள பத்தி மட்டும்தான் யோசிக்கிற. உன் மனைவி அப்படின்னு என்னப்பத்தி யோசிச்சு இருந்தா, இதுக்கு வேற ஏதாவது வழி கண்டுபிடிச்சிருக்க முடிஞ்சிருக்கும். ஆனா நான் என் குடும்பத்த விட உன்ன மட்டுமே அதிகம் நேசிச்சதால, இதை எப்படி தாங்கிக்கிறதுன்னு தெரியாம தவிக்கிறேன். காதல்கிறது என்ன அசோக், ஜஸ்ட் ஒரு நம்பிக்கை. நீ என்னை நல்லா வச்சிருப்பன்னு நான் நம்புறதும், நான் உனக்கு உறுதுணையாயிருப்பேன் அப்படின்னு நீ நம்புறதும் தான். அந்த நம்பிக்கை எல்லார்கிட்டயும் வர்றதில்ல ஒருத்தர்கிட்டதான். தாய் தகப்பன்கூட வைக்காத ஒரு நம்பிக்கைய, முன்னபின்ன தெரியாத ஒரு பெண் உன் மேல வைக்கிறது எவ்வளவு உயர்ந்த விஷயம். ஆனா நீ அம்மா அப்பா பாசத்துக்கு முன்னால என் நம்பிக்கைய எடை போட்டு பாத்துட்டு வந்து எங்கிட்ட சொல்றதை பெரிய அவமானமாதான் நினைக்கிறேன்.

ரொம்ப பாலிஷான வார்த்தைகளை போட்டு அவங்க சாவுல, இவங்க சோகத்துல, சாபத்துல அப்படின்னு பேசுன. இப்ப சொல்லு என் சாவுல உன்னோட, இல்ல உன் தங்கையோட வாழ்க்கை ஆரம்பிச்சா எப்படி இருக்கும்னு சொல்லு. பயப்படாத நான் நிச்சயம் செத்துட மாட்டேன். தயவு செஞ்சு, நீயும் தற்கொலைக்கு முயற்சி செஞ்சிடாத. ஏன்னா  உன் தற்கொலை முயற்சிக்கு காரணம், நாளைக்கு உன் பிள்ளைங்க தற்கொலை செஞ்சுக்கிற நிலை வந்தா அந்த வேதனைய இப்பவே நீ தெரிஞ்சிகிறதுக்காகதான், அப்படின்னு நான் நினைக்க வேண்டியதாயிருக்கும். இந்த இரண்டு வருட காதல் என் வீட்ல நடந்த எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும் செழிப்பா வளர்ந்து திடமா தேக்கு மரமா நிக்குது. ஆனா உன்னோட காதல் ஒரே இரவுல முருங்க மரமா சரிஞ்சி கிடக்குது. என் காதல்ல தோத்துட்டேன்ற வலியை விட, ரெண்டு வருசமா ஒரு கோழைய காதலிச்சிருக்கேன் அப்படின்ற வலிதான் என் நெஞ்சை பிசையுது. வாழ்க்கையில இன்னொருமுறை உன்ன சந்திக்க கூடாதுன்னு ஆண்டவன வேண்டிக்கிறேன்.

குட்பை.............

எக்ஸ்க்யூஸ் மீ சார். ஹாட் ஆர் கோல்ட் சார் ?

வாட்......?

சாரி சார், ஐ ம் ஆஸ்கிங் அபௌட் த காஃபி சார்......

அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்