வெள்ளி, 11 ஜனவரி, 2013

விவசாயியின் ஒரு தலை காதல்


காத்திருந்து காத்திருந்து
விழியிரண்டும் பூத்ததினால்,
வீற்றிருந்த ஆற்றங்கரை
எழில் குறைந்து போனதடி.

மேட்டுவயல் மீதுனது
எழிலுருவம் கண்டதினால்,
ஆற்றுமடை திறந்ததுபோல்
மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்ததடி.

சேற்றுநிலம் கால்பதித்து
நீநடந்து வருவதினால்,
களைமறைந்து பயிர்வளர்ந்து
வீட்டின் குதிர் நிறைந்ததடி,

ஊற்றிலுந்தன் நிழல்படிந்து
நீரையள்ளி செல்வதினால்,
ஆற்றைச்சேர்ந்த ஊற்றுநீரில்
மீன்கள் எல்லாம் செழித்ததடி.

திரும்பிச்செல்லும் உன்னுருவம்
எனைமறந்து செல்வதினால்,
கண்டுஉனை ரசித்தமனம்
களர் நிலமாய் கொல்லுதடி.

எட்டநின்று உன்விழியால்
ஒருமுறையெனை காண்பதினால்,
பட்டிதொட்டி எனத்திரியும்
என் பித்துமனம் தெளியுமடி.

அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

7 கருத்துகள்:

 1. எல்லோருக்குமே காதல் பொதுவானதே ! விவியாசாயிக்கும் காதல் உண்டென உரைத்துளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
   காதல் பொதுவானது என்றாலும், அவர்களின் கற்பனை வர்ணனை எல்லாம் அவரவர் தொழில் சார்ந்தே இருக்கும் என்பதால், இங்கு தொழில் சார்ந்த தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

   நீக்கு

 2. வணக்கம்!

  ஆற்றெழும் ஆசைகளை அள்ளி அளிக்கும்..பா
  ஊற்றெழும் வண்ணம் உடைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா, தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்