வியாழன், 6 டிசம்பர், 2012

லைஃப் ஆஃப் நாய் (இது ஒரு நாயின் கதை)


அழகிய வீடு, அதில் ஒரு அழகிய குடும்பம், அந்த குடும்பத்தில் ஒரு அழகிய தேவதை. அந்த தேவதைக்கு இளகிய மனம்.



ஒரு நாள் வீட்டில் தேவதை விளையாடி கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குட்டி வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்ததை கண்டாள். ஓடி சென்று உணவு கொண்டு வந்து கொடுத்தாள். முதன் முதலாக அன்பை உணர்ந்த நாய் குட்டி, தேவதையை சுற்றி சுற்றி வந்தது. அவளுடனே இருக்க நினைத்தது. அவளுடனே நெருக்கமானது. தேவதையின் நண்பர்களுக்கும் ஒரு உயிருள்ள விளையாட்டு பொம்மையானது. நாய் குட்டிக்கு உலகமே இனிமையாக தெரிந்தது. நாயாக பிறந்ததற்க்காக ஆனந்தமடைந்தது.

தேவதைக்கு பிறந்த நாள் வந்தது. வீட்டில் உறவுகள் நிறைந்தனர். பரிசுகள் குவிந்தன. அதிலும் ஒரு உயிருள்ள பரிசு. ஒரு பொமரேனியன் நாய்க்குட்டி. குடும்பமே கொண்டாடியது. அப்பா சொன்னார் நல்ல ஜாதி நாய்க்குட்டி. அம்மா சொன்னார் அதிக விலை உயர்ந்தது. தேவதைக்கும் அந்த வெல்வெட் ரோமம் போர்த்திய நாயின் மீது ஒரு ஈர்ப்பு. நண்பர்களுக்கோ புதியதாய் ஒரு விளையாட்டு பொம்மையின் கவர்ச்சி.

அப்பா சொன்னார், மகளே தெரு நாய் வீட்டில் இருப்பது அசிங்கம், வெல்வெட் நம் வீட்டில் இருப்பதுதான் நமக்கு கௌரவம். அதனால் தெரு நாயை விரட்டி விடு. தேவதைக்கு என்ன செய்வதென்ற குழப்பம். புதிய நாய் அழகாக இருந்தாலும், பழகிய நாயை எப்படி விரட்டுவது. நண்பர்களை நாடினாள் உதவிகேட்க.

வீட்டின் வாசல் வரை மட்டுமே தெரு நாய்க்கு அனுமதி, வீட்டினுள் ஜாதி நாய்களுக்கு மட்டுமே அனுமதி. இது உலக வழக்கம் அதனால் நீ தெரு நாயை விரட்டி விடு என்று நண்பர்கள் இயம்ப,

தேவதைக்கு உலக நடப்பு புரிந்தது.

ஒரு சுபயோக சுபதினத்தில் தெரு நாய் விரட்டப்பட்டது. நாய்க்கு தேவதையின் பாரா முகம் புரியவில்லை. அந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்தது. தேவதை வெல்வெட்டுடன் கொஞ்சி விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்தது. தேவதைக்கு தெரு நாய் தூர நின்று பார்ப்பது தெரிந்தது. ஆனால் திரும்பி பார்த்தால் ஓடி வந்து ஒட்டி விடக்கூடிய அபாயம் புரிந்தது. இருக்கிற ஐந்தறிவில் விஷயம் புரிந்திட, தெரு நாய்க்கு உலகமே இருண்டது தேவதையிடம் இருந்து விலகி மறைந்தது.

நிராகரிப்பு வேதனையானது. அதிலும் மனதுக்கு பிடித்தவர்களின் நிராகரிப்பு கொடுமையானது. அதிலும் நிராகரிப்புக்காண காரணம் அறியாதது மிக மிக கொடுமையானது. விலகி நடந்த நாயின் கண்ணில் ஈரம். தெரு நாயின் இந்த நிலை என்று மாறும்.

இது தான் லைப் ஆஃப் நாய். (ஒரு நாதாரி நாயின் காதல் கதை).

இந்த கதையை யாரும் ஏடாகூடமாக புரிந்து கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது.

அன்புடன் முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

2 கருத்துகள்:

  1. ஆஹா! அருமையான கதை மிகவும் ரசித்தேன், தொடர்ந்து எழுதுங்கள் , நானும் உங்களை பின்தொடர்கிறேன்.

    உங்களுக்கும் நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்துபோகவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. நிச்சயம் வருகிறேன். தொடர்கிறேன்.

      நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்