புதன், 17 அக்டோபர், 2012

புலம்பல்கள் 17/10/2012

ராமர் பாலம்.

 

சேது சமுத்திர திட்டத்திற்க்கு எதிராக சுப்ரமணிய சுவாமி தொடர்ந்திருந்த வழக்கில், இத்திட்டத்தை கைவிடுமாறும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கும் படியும், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பா.ஜ.க தவிர அனைத்து கட்சிகளும் இம்முடிவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அம்மா ஆட்சிக்கு வந்ததிலிருந்து உருப்படியான எந்த வேலையும் செய்தாரோ இல்லையோ... இது போல உருப்படாத பல வேலைகளை செய்துவிட்டார். மக்களுக்கு தங்கள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. க்களை திரும்பிப்பெறும் உரிமை வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய அன்னா ஹசாரேவினை இந்நேரத்தில் நினைத்துப்பார்க்கிறேன். எப்படியும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியை விட்டு தூக்க முடியாது என்ற இருமாப்புத்தான், இது போன்ற மடத்தனமான செய்கைகளுக்கு காரணம் என எண்ணுகிறேன். மக்கள் வரிப்பணம் இது போன்ற வீண்செலவுகளால் நிர்மூலமாக்கப்படுவதை காணும்போது, வரி ஏய்ப்பு செய்யும் வியாபாரிகள் செய்கைகள் கூட நியாமானதாகவே படுகிறது. இது மக்களுக்கான ஆட்சியா அல்லது கடவுள்களுக்கான ஆட்சியா என்று தெரியவில்லை. ஆண்டாடுகாலமாக போராடி கொண்டு வந்த திட்டத்தை, ராமரின் பெயரை சொல்லி தடுப்பதற்க்கு யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது...?

வாக்களித்து மக்கள் இவருக்கு அதிகாரம் கொடுத்திருப்பதாக இவர் நினைத்தால், இதே மக்கள்தான் சென்ற முறை திமுக வுக்கும் வாக்களித்து இத்திட்டத்தை நிறைவே சொன்னார்கள் என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்...? யாரோ ஒரு சில வட நாட்டு பக்த கேடிகளுக்காக, நீர் ஆதாரத்துக்காக கூட மனமிரங்காத பரதேசிகளுக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடை செய்யும் மாந்தர் குல மாணிக்கத்தை, தமிழர்கள் தடை செய்யும் நாள் தொலைவில் இல்லை என்பதை முதல்வர் ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காத்தான் கடவுளே ஒழிய, கடவுள்களுக்காக மக்கள் இல்லை. கொடநாடு எஸ்டேட்டிலோ, (ஹைதராபாத் அல்லது போயஸ்) தோட்டத்திலோ ஏதாவது சிலை கிடைத்தால் அவரது மாளிகையை கோவிலாக மாற்றிவிடுவாரா...? தனது சொத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் ஊரான் வீட்டு நெய்யே.. என்று நினைக்கும் அம்மாவை எப்படி புகழ்வதென்றே தெரியவில்லை.

சினிமா வியாபாரம். 

 

நேற்று கமல் ஹாசன் அவர்களின் பேட்டியை செய்திகளில் காணமுடிந்தது. விரைவில் திரைப்பட துறையினருக்கு பயிற்சி பட்டறை துவங்க இருப்பதாக சொன்னார். கமல் வாயிலிருந்து இப்படி ஒரு நல்ல வார்த்தை வந்தது நல்ல விசயம். அபூர்வ சகோதரர்கள் படம் எடுத்து முடிக்கும் வரை அதன் தொழில் நுட்பம் மற்றும் எடுக்கப்படும் விதம் குறித்து யாரும் விவாதிக்க அனுமதிக்கப்படவில்லை. படம் வெற்றி பெற்று நூறு நாட்களை தாண்டி ஓடிய பின்பு, ஒரு நிருபரின் அப்பு கதாப்பாத்திரம் எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, நீங்கள் எப்படி எல்லாம் எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களோ அப்படி எல்லாம் எடுக்கப்படவில்லை என்று சொன்னார். நன்றாக வெற்றியடைந்த படம் பற்றிய அறிவையே அடுத்தவருக்கு பயிற்றுவிக்காத கமலிடம் இன்று மாற்றம். இதுவும் வியாபார நோக்கோடு இல்லாதவரையில் இது நல்ல மாற்றமே.

மேலும் ஒரு பயங்கரமான கருத்தையும் சொன்னார். திரையரங்குகளில், குளிர்பானங்களைவிட டிக்கட் விலை நிச்சயம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்றார். இவர் அதிபுத்திசாலி இல்லையா... அதனால்தான் குளிர்பானங்களின் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்த வில்லை. அதை கொஞ்சம் மாற்றி டிக்கட் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்றார். ஏனென்றால் குளிர் பானத்தை விட படம் எடுப்பதில் செலவு அதிகம் என்று சொன்னார். சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் தங்கள் நஷ்டத்தை போக்க நடிகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று சொன்ன போது போர்க்கொடி தூக்கிய நடிகர்கள் இன்று தயாரிப்பு செலவை பற்றி பேசுவது ஆச்சரியமளிக்கிறது.


செய்திகளின் சேதிகள்.

பல நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம். எந்த செய்தி சேனல்களாக இருந்தாலும் வேற்று மொழி செய்திகளை காட்டும்போது கீழே தமிழில் மொழிபெயர்த்து காட்டுவார்கள். ஆனால் காட்டப்படும் ஓளிப்பதிவில் இரண்டு நிமிடம் விடாமல் பேசினாலும், மொழிபெயர்ப்பில் இரண்டு வரிகள் மட்டுமே காட்டப்படுகிறது. எனது சந்தேகம் மொழிபெயர்ப்பு தவறா...? அல்லது தமிழ் மொழி அவ்வளவு சுருக்கமானதா...?

மக்கள் டிவி செய்தியில், ”கமுக்க ஒளிப்பதிவு பெட்டி” என்ற வார்த்தையை கேட்டேன். மிக கவனமாக பார்த்த பின்பு சி.சி.டி.வி(Closed-circuit television) என்றழைக்கப்படும் ஒளிப்பதிவு கருவி என்று புரிந்தது. அடுத்து இதே போல் “கமுக்க செய்தி” என்றார்கள்.

உஷ்...அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே...,

கமுக்கமாக தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு எழுந்தேன்.அன்புடன்
முத்துக் குமரன்.

2 கருத்துகள்:

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்