செவ்வாய், 9 அக்டோபர், 2012

பாவ மன்னிப்பு

நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் லிட்டில் ஃப்ளவர் பள்ளி திங்கள் கிழமைக்கான பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பணக்கார பிள்ளைகள் கார்களிலும், நடுத்தரவர்கம் ஆட்டோ மற்றும் வேன்களிலும், ஏழைவர்கம் பள்ளி பேருந்து மற்றும் மிதிவண்டிகளிலும் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். பள்ளியின் தாளாளர் ஃபாதர் இமானுவேல் பள்ளியின் முதல் தளத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். பள்ளியின் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து இன்சார்ஜ் தேவசகாயம் வேக வேகமாக, ஃபாதரை நோக்கி வந்தார்.


ஃபாதர் அரை மணி நேரம் முன்னால் வந்திருக்க வேண்டிய மூன்றாம் நம்பர் பஸ் இன்னும் வந்து சேரலை.

மொபைல் ட்ரை பண்ணுனீங்களா?

ரிங் போய் கிட்டே இருக்கு யாரும் எடுக்க மாட்டேன்கிறாங்க ஃபாதர்.

யாரு டிரைவர்?

ஜோசப் ஃபெர்னாண்டஸ் தான் ஃபாதர்.

ரொம்ப பொறுப்புள்ளவன் ஆச்சே,  இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஃபாதர் இமானுவேலை கண்டால் அனைவருக்கும் நடுக்கம்தான். சட்டென கோப படுவார். பிள்ளைகள் யாராவது ஃபீஸ் கட்டவில்லை என்றால் தயவு தாட்சண்யமே இல்லாமல் பள்ளிகூட வாயிலில் நிற்க வைத்துவிடுவார். மாணவர்கள் வெட்கம் தாங்காமல் எப்படியும் பணம் புரட்டி கட்டிவிடுவார்கள் என்பது ஃபாதர் இமானுவேலின் லாஜிக். ஆனால் பள்ளியில் கட்டுப்பாடு அதிகம், ஸ்டேட் ரேங் ஹோல்டர்ஸ் அதிகம். அதனால் அந்த பள்ளியில் சேர மக்கள் தவமிருந்தனர்.

பள்ளி காம்பவுண்ட் கேட்டை தாண்டி மூன்றாம் நம்பர் பஸ் உள்ளே வந்து கொண்டிருந்தது. தேவசகாயத்துக்கு அப்போது தான் உயிர் வந்தது.

பேருந்தை நிறுத்தி விட்டு ஜோசப் நேராக ஃபாதரை நோக்கி வந்தான். வழியில பஸ் பிரச்சனை பண்ணிடுச்சி ஃபாதர். ஏதோ கட கடன்னு சத்தம் வந்தது, ஸ்டியரிங் கண்ரோலே பண்ண முடியலை.  ஒருவழியா மெதுவா ஓட்டிட்டு வந்து சேர்ந்துட்டேன் ஃபாதர்.

நம்ம மெக்கானிக் முருகேசனை கூப்பிட்டு சரி பாத்திருக்க வேண்டியது தானே?

நான் என் மொபைல வீட்லயே வச்சுட்டு வந்திட்டேன் ஃபாதர். அதான் என்னால அவரை கூப்பிட முடியல. இப்ப போய் செக் பண்ணிட்டு வந்திரேன் ஃபாதர்.

மதியம் முருகேசன் மற்றும் ஜோசப் இருவரும் ஃபாதர் இமானுவேலை பார்க்க வந்திருந்தனர்.

என்ன முருகேசன் என்னாச்சு வண்டி பிரச்சினை?

ஃபாதர் வண்டி மோசமான கண்டிசன்ல இருக்கு, ஆக்ஸில் ராடு ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு, என்ஜினும் ரொம்ப பழசு. செலவு ரொம்ப அதிகம் இருக்கும், இதுக்கு பேசாம ஒரு புது வண்டியே இறக்கிடலாம்.

என்னய்யா பேசுற பணம் என்ன மரத்துலயா காய்க்குது. இப்ப தானே வண்டிக்கு எஃப்.சி எல்லாம் முடிச்சுது ?

ஃபாதர் நாம எங்க வண்டிய கொண்டு போய் செக் பண்ணுனோம். உங்க ஃப்ரண்ட் ஆர்.டி.ஓன்னதால. எப்படியோ கிளிரன்ஸ் வாங்கிட்டோம்.

சரி, புது வண்டி வாங்குற ஐடியாவெல்லாம் வேணாம். இப்ப இருக்கிறத வச்சு குறைஞ்ச செலவுல என்ன பண்ணலாம்? அதுக்கு யோசனை சொல்லு.

சரி ஃபாதர். வண்டிய ஷெட்டுக்கு எடுத்துட்டு போறேன். எங்கிட்ட பழைய பார்ட்ஸ் இருந்தா அத பயன்படுத்திக்கலாம். இல்லாத பார்ட்ஸ் எல்லாம் வாங்கித்தான் ஆகனும். ஆனா ரொம்ப நாளைக்கு இந்த வண்டி தாங்காது, பின்னாடி என்ன குறை சொல்லக்கூடாது.

வெரிகுட். நைட்டுக்குள்ள சரி பண்ணிடுவல்ல?

குறைஞ்சது ரெண்டு நாள் ஆகும் ஃபாதர்.

என்னது ரெண்டு நாளா...? நாளைக்கி காலையில பசங்கள அழைச்சுட்டு வரணுமே என்ன பண்றது...? ம்ஹும்....சனி ஞாயிறு லீவுதான் அன்னக்கி கொண்டு போய் சரி பண்ணிடு. அதுவரை ஜோசப் நீ அட்ஜஸ் பண்ணி ஓட்டு.

ஃபாதர் வண்டி இந்த கண்டிசன்ல ஓட்டுறது, தற்கொலைக்கு சமம்.

எல்லா பேரண்ட்ஸ் கிட்டேயும் கைநீட்டு காசு வாங்கியாச்சு, வேற வழியில்ல, எல்லாம் கர்த்தர் பார்த்துப்பார். நீ கவலைப்படாத. ஒன்னால முடியலன்னா சொல்லு, நான் வேற ஆள போட்டு ஓட்டிக்கிறேன்.

 ஜோசப்க்கு அடங்கி போறதை தவிர வேறு வழியில்லை.

மறுநாள் வண்டி எடுக்கும் போதே ஜோசப்க்கு மனசு வலித்தது. ஏதோ நினைத்தவன் பள்ளியை ஒட்டியிருந்த தேவாலயத்திற்க்கு சென்று மண்டியிட்டு அமர்ந்தான். பஸ்சில் வரும் அனைவருக்காகவும் வேண்டி கொண்டு எழுந்தான்.

ஒவ்வொரு நிறுத்தமாக சென்று அனைவரையும் ஏற்றிக் கொண்டு திரும்பும் வழியில்  மேம்பாலத்தை கடக்கும் போது, பட்டென்று சத்தம். ஜோசப்க்கு தலையே சுற்றுவது போலிருந்தது. வேக வேகமாக ஸ்டியரிங்கை சுழற்றினான். ஆனால் பேருந்தின் போக்கில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ப்ரேக் பிடித்த சலனம் கூட தெரியவில்லை. பாலத்தின் கைப்பிடி சுவரில் மோதிய பஸ் மெதுவாக அதை உடைத்துக்கொண்டு தள்ளாடியபடி கீழே இருந்தா ஏரியில் இறங்கியது. பேருந்து முழுவதும் கூச்சல், பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், அவர் அவர் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு இறங்கி ஓடி வந்தனர்.

ஜோசப் வேக வேகமாக முடிந்தவரையில் சிறுவர்களை கரையேற்றினான். இன்னும் சிலர் நீரின் மேலும் கீழும் தரையில் விழுந்த மீனைப்போல் வாயை திறந்து திறந்து சென்று வந்ததை பார்த்தான். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை சிலை போல அமர்ந்து விட்டான். ஓடி வந்த மக்கள் கூட்டம் முடிந்த வரை சிறுவர்களை காப்பாற்றியது. நான்கு பேர் இறந்த விட்டனர். உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் டிரைவரை தேடி, அடித்து துவைத்தது.

சிறிது நேரத்தில் போலிஸ் வந்து ஜோசப்பை மீட்டது. ஜோசப்பால் நடக்க முடியவில்லை. எங்கெங்கு அடிபட்டிருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

போலிஸ் ஸ்டேசனில் ஃபாதர் இமானுவேல் இன்ஸ்பெக்டரை பார்த்து சொன்னார். சார், பிரச்சினைய எப்படி முடிக்கலாம்னு சொல்லுங்க. என்ன செலவானாலும் பரவாயில்ல.

என்ன ஃபாதர் சின்ன விஷயமா நடந்துருக்கு..? நாலு உயிர் போயிருக்கு. டிரைவர இப்ப வெளியில விடமுடியாது. இறந்த பசங்களோட பேரண்ட்ஸ பார்த்து வெளியிலயே காம்ப்ரமைஸ் பண்ணிக்குங்க. இல்லன்னா உங்க பேர் மட்டும் இல்ல ஸ்கூல் பேரும் நாறி போயிரும். பஸ் விஷயத்த பொறுத்தவரையில ஆர்.டி.ஓ வும் சம்பந்த பட்டுருக்கதால, கொஞ்சம் செலவு பண்ணி அதை ஜஸ்ட் ஆக்ஸிடெண்ட்னு எப்படியும் மாத்திடலாம். டிரைவருக்கு ஆறுமாசத்துல இருந்து ஒருவருசத்துக்குள்ள தண்டனை கிடைக்கலாம். வேற வழியில்ல.

ஓகே இன்ஸ்பெக்டர். நான் ஜோசப்பை பார்கலாமா...?

தாராளமா...

ஜோசப் ஒன்னும் கவலைப்படாத. எவ்வளவு செலவானாலும் ஒரு மூனு மாசத்துக்குள்ள வெளியே கொண்டு வந்துடுவேன். அதுவரை பஸ் விஷயத்தை வெளிய சொல்லாத. மத்ததை நான் பார்த்துக்கிறேன்.

ஜோசப் எதுவும் பேசவில்லை.


மூன்று மாதங்கள் கழித்து பள்ளியில் ஃபாதருக்காக காத்திருந்தான் ஜோசப். வெளியில் சென்றிருந்த ஃபாதர், உள்ளே நுழைந்ததும் வா ஜோசப் எப்படி இருக்க..? எப்ப வேலையில ஜாயிண்ட் பண்ற என்றார்.

இல்ல ஃபாதர், நான் வேலைக்கு சேர வரலை. உங்கள பார்த்து பேச தான் வந்தேன்.

சொல்லு என்ன விஷயம். கேசை முடிக்க எவ்வளவு செலவாச்சு ஃபாதர்.

அது ஆச்சு காம்பன்ஷேசன், லஞ்சம் அது இதுன்னு ஒரு இருவது லட்சம்.

ஏன் ஃபாதர் இந்த பணத்த வச்சு புதுசா ஒரு பஸ் வாங்கியிருந்தா அந்த நாலு உயிருமாவது மிஞ்சியிருக்கும் இல்ல.

ஃபாதர் அமைதியாயிருந்தார்.

என்னால இந்த மூனு மாசமா தூங்க கூட முடியல ஃபாதர். கண்ணை மூடினாலே, மூச்சுவிட முடியாம தவிச்ச அந்த பிள்ளைங்கதான் தெரியுது. வாயிலயும் வயித்துலயும் அடிச்சிகிட்டு அழுத அந்த பெற்றோர்களை என்னால மறக்க முடியல ஃபாதர். நாம பணம் சம்பாதிக்க தெரிஞ்சே நாலு உயிர பறிச்சிருக்கோம்.

ஜோசப் நீ ரொம்ப குழம்பி இருக்கிறன்னு தெரியுது. மனிதர்கள் தவறு செய்வது இயல்பானது. நாம என்ன வேணும்னா செய்றோம். கடவுளுக்கு எல்லாம் தெரியும். சர்சுக்கு போய் ஃபாதர் அல்போன்ஸ் இருப்பாரு பாவ மன்னிப்பு கேளு. கர்த்தர் எல்லாத்தையும் மன்னிச்சுருவாரு.


சர்ச் உள்ளே மெதுவாக நுழைந்த ஜோசப்பை எதிர் கொண்டார் ஃபாதர் அல்போன்ஸ்,

என்ன ஜோசப் சௌக்கியமா?

நல்லாருக்கேன் ஃபாதர். பாவ மன்னிப்பு வாங்கலான்னு வந்தேன்.

சரி வா... அறையின் உட்புறம் சென்று அமர்ந்தார்.

வெளியில் மண்டியிட்டு அமர்ந்தான் ஜோசப்.

ஃபாதர் தெரிஞ்சோ தெரியாமலோ என்னால அஞ்சு உயிரு சேதாரமாயிருச்சு. நாலு உயிர் போனதுக்கு கடவுள்கிட்ட பாவ மன்னிப்பு கேட்கனும்.

ஃபாதர் அல்போன்ஸ் துணுக்குற்றார். மகனே மீதம் இருக்கும் ஒரு உயிருக்கு பாவ மன்னிப்பு வேண்டாமா?

இல்ல ஃபாதர் அதுக்கு என்னை நிச்சயம் கர்த்தர் மன்னிச்சிருப்பார்.
அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி : பட உதவி - கூகுள்

4 கருத்துகள்:

 1. இந்தியன் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு அழகான ஒரு முடிவினைக் கொடுத்துள்ளிர்கள் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிட்டுக்குருவி.

   நீக்கு
 2. அருமை! அழகான முடிவு.

  ஃபாதர் இமானுவேலை கர்த்தர் மன்னிக்கவே கூடாது:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி துளசி கோபால்.

   நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்