வியாழன், 20 செப்டம்பர், 2012

பிறந்த நாள் ஞாபகம்

கற்பகம் என்ஜினியரிங் ஒர்க்ஸ் முழுதும் இரும்பு அடிக்கும் ஓசையும், வெல்டிங் செய்யும் இரைச்சலுமாய் காதை கிழித்துக் கொண்டு இருந்தது.
டிரிங்...டிரிங்... தொலை பேசி அழைப்பு மணி ஒலித்தது.

தொலைப்பேசியை எடுத்த சூப்பர்வைசர் தியாகு, அறிவு உனக்கு போன்... என கடுப்புடன் கத்தினார். யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே வந்து போனை வாங்கி ஹலோ... யார் வேணுங்க..? என்றான்.


ஹாப்பி பர்த்டே டா அறிவு. குமாரின் குரல் எதிர்முனையில் கேட்டது.

ரொம்ப தேங்க்ஸ் டா.

அப்புறம் எங்க இன்னைக்கி பார்ட்டி..?

நைட்டு எட்டு மணிக்கு சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கிற முனியாண்டி விலாஸ் வந்துரு. அப்படியே நம்ம டீம்ல இருக்க எல்லாத்தையும் அழைச்சுட்டு வந்துரு.

சீ.... ஏன்டா, திங்கிறதுக்கு பேராடா பார்ட்டி..

நீ வாடா அப்புறம் பாத்துக்கலாம்.

குமாருக்கு கோவம் வந்தாலும், அறிவு ஏதாவது ஏற்பாடு பண்ணிருப்பான்னு ஒரு நம்பிக்கை. அறிவு எதையும் சொல்லிட்டு செய்யமாட்டான். அது சில நேரம் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தாலும், பல தடவை அதிர்ச்சியில தான் கொண்டு போய் விட்டுருக்கு.

போனை வைத்துவிட்டு திரும்பிய அறிவு, கோபத்தோடு முறைத்து கொண்டிருக்கும் தியாகுவை கவனித்தான்.

ஒரு நாளைக்கு எத்தனை போன்..? நான் இங்க சூப்பர்வைசர் வேலைக்கு வந்தனா இல்ல உனக்கு ஹெல்பர் வேலைக்கு வந்தனா...?  தியாகு கேட்டார்.

அட விடுங்க சார். நமக்கு ப்ரண்ட்ஸ் அதிகம். ஒரு கிரிக்கெட் டீம் பொருளாளருக்கு ஒரு நாளைக்கு பத்து கால் கூட வரலன்னா எப்படி...? ஜாலியாக கிண்டலடித்தான் அறிவு.

அறிவு - முழுப்பெயர் அறிவழகன், மிகவும் வேடிக்கையானவன், எப்படியென்றால் பத்தாம் வகுப்பு கணித தேர்வுக்கு, ஆங்கில பாட பிட்டு கொண்டு போகும் அளவு வேடிக்கையானவன். படிப்புக்கும் அவனுக்கு பல கிலோ மீட்டர் தூரம். அதனால் வெகு விரைவில் வேலைக்கு சென்று, அனுபவ கல்வியாக வெல்டிங் பயின்று, ஓரளவு சம்பாதிப்பவன். ஆனால் அவனுடைய நண்பர்களுக்கு அவன் தான் குபேரன். அவர்கள் அனைவரும் கல்லூரியில் படித்து கொண்டு இருப்பதால், அவர்களுடைய தேவைகளுக்கு இவனையே நம்பியிருந்தனர். அறிவுக்கும் அதில் ஒரு பெருமை. அறிவிடம் யாராவது உன்னை நம்பிதான் வந்துருக்கேன் என்று சொல்லிவிட்டால் போதும், அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்காதவன். இவனை பற்றி நன்கு தெரிந்த இவனது நண்பர்கள், எதையுமே விளையாட தெரியாத இவனை அவர்களது கிரிக்கெட் டீம் பொருளாளர் என்று போஸ்டிங் கொடுத்து வைத்து இருந்தனர். அறிவழகனுக்கு பெயரில் இருக்கும் அளவுக்கு அறிவு தலையில் கிடையாது.

ஒருமுறை ஒரு போட்டிக்கு பணம் கட்டிவிட்டு ஒட்டு மொத்த டீமும் களமிரங்க தயாராக இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன் கிளவுஸ் வந்து சேர வில்லை. பொருளாளரிடன் ஏற்கனவே வாங்கி வைக்க சொல்லியாயிற்று, ஆனால் இன்னும் வந்து சேரவில்லை. அதே நேரம் பொருளாளர் அறிவு வேகவேகமாக சைக்கிளை மிதித்து கொண்டு  சென்றுக்கொண்டிருந்தான். கடந்த இரண்டு நாளாக பொருளாளருக்கு பணமுடை, ஆனால் அதை டீமிடம் சொன்னால் அவனை அற்பமாக எண்ணிவிடுவார்கள். கடன் வாங்கியவர்களும் திரும்ப தரவில்லை. இப்பொழுது கையுறை வாங்க பணம் இல்லை. யாரிடம் கேட்பது...யோசித்துக் கொண்டிருந்த பொழுது, திடீரென அவனது நண்பன் ராஜு ஞாபகம் வந்தது அவன் ஈ.பி-ல் வேலை பார்த்து கொண்டு இருந்தான். சரி அவனிடம் கேட்போம் என்று சென்று கொண்டிருந்தான்.

அங்கே டீமில் ஒரே குழப்பம். டேய்... அவன் வருவான்னு எனக்கு தோனலை... ரமேஷ் புலம்பிக் கொண்டிருந்தான். இல்லடா, அறிவு கொஞ்சம் பேக்கா இருந்தாலும், யாரையும் ஏமாத்த மாட்டாண்டா... குமார் சொன்னான். போட்டி ஆரம்பிக்க சரியாக ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது, தூரத்தில் மூச்சிரைக்க சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்த அறிவைக் கண்டதும், ஒட்டு மொத்த டீமும் போட்டியில் வென்றுவிட்டதை போல கூச்சலிட்டது. வேகமாக வந்த அறிவு அருகில் வந்து சட்டென ப்ரேக் பிடித்து நின்றான். வேகமாக ஓடி வந்த குமார், மாப்ள சீக்கிரம் க்ளவுஸை எடுடா.. ஓப்பனிங் பேட்ஸ்மேன் இறங்கப் போறாங்க என்றான். பையில் வைத்திருந்த க்ளவுஸை வெளியில் எடுத்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி.

என்னடா ஈ.பி. ல கரண்ட் கம்பி தொடுறதுக்கு போடுற ரப்பர் க்ளவுஸை வாங்கிட்டு வந்துருக்க.. நொந்து போய் கேட்டான் குமார்.

ஒண்ணுமில்லடா... எங்கங்கயோ தேடினேன் எதுவும் சரியில்ல. பிஞ்சுபோன க்ளவுசை கொள்ள விலை சொல்றாங்க. அதான் நம்ம ராஜு கிட்ட போய் நல்ல அடிபடாத மாதிரி க்ளவுஸ் வேணும்டான்னேன். அவன் செலக்‌ஷன் தான் இது, ஆனா கேட்ட மாதிரியே அருமையா ஒன்னு ஸ்டோர் ரூமில் இருந்து தேடி குடுத்துருக்கான். போட்டுபாரு அடிபட சான்சே இல்ல...பெருமையுடன் சொன்ன அறிவை அதிர்ச்சியுடன் பார்த்தது டீம். அந்த போட்டியில் வரலாறு காணாத பெரும் வெற்றியை பெற்றது எதிர் டீம். இது போல் எதையும் வித்தியாசமாக செய்வது அறிவு ஸ்டைல்.

இன்று அறிவழகனின் பிறந்த நாள். ஒட்டு மொத்த டீமும் பொருளாளரின் பிறந்த நாளை கொண்டாட, முனியாண்டி விலாஸ் எதிரில் அமர்ந்திருந்தது.

குமாரு... எத்தன மணிக்குடா அறிவு வர சொன்னான். ரமேஷ் கேட்டான்.

எட்டுதாண்டா சொன்னான்... ஆனா என்னவோ இன்னும் ஆள காணோம்.

அப்போது வேக வேகமாக தூரத்தில் அறிவு ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான். கையில் ஒரு பை.

நெருங்கி வந்ததும் குமார் கேட்டான். ஏண்டா இவ்வளவு லேட்... பக்கத்து ஒயின்ஷாப்ல சரக்கே தீரப்போகுது..

ஒண்ணும் கவலைப் படாதீங்கடா. நான் ஏற்கனவே நம்ம ப்ரண்ட புடிச்சு ஆர்மி கேண்டின்ல இருந்து சரக்கு ரெடி பண்ணிட்டேன். அறிவு பிறந்த நாள்னா எல்லாருக்கும் ஞாபகம் இருக்க வேணாமா... அதான். பெருமை பேசிக் கொண்டே அனைவரையும் ஓட்டலுக்குள் அழைத்து சென்றான்.

குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. டேய் அறிவு என்னடா சரக்க வாங்கிட்டு ஓட்டலுக்குல்ல போற...

நீ பேசாம வா இன்னக்கு எல்லாமே புது அனுபவமாத்தான் இருக்கனும்.

ஓட்டலுக்குள் மாடிக்கு ஒரு படிகட்டு இருந்தது. ஏறி மேலே சென்றவுடன் பல டேபிள்களுடன் கூடிய பெரிய அறை இருந்தது. நேரே சென்று இரண்டு டேபிள்களை ஒன்றாக இணைத்து ஒரு பெரிய மேசைவிரிப்பை விரித்து, வாங்கடா வரிசையா எல்லாரும் உக்காருங்க என்றான் அறிவு.  பார்ட்டி ஆரம்பித்தது. அனைவருக்கும் அது புது அனுபவமாக இருந்தது.

சரக்கு தீர தீர பினாத்தல்கள் அதிகமானது. அனைவரும் அறிவை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்ததில், அறிவுக்கு பெருமை பிடிபடவில்லை. சரக்கு தீர்ந்ததும் அந்த டேபிள் மீதே உணவு பரிமாற பட்டது.

ரமேஷ் கேட்டான் அறிவு எப்படிடா இந்த இடமெல்லாம் தெரிஞ்சது.

எனக்கு படிப்பறிவு கம்மின்னாலும் உலக அறிவு அதிகம்டா...

ஆமாடா நாங்க எல்லாம் ஏதோ படிக்கிறோம், எதுவும் தெரியமாட்டேங்குது. ஆனா.. நீ என்னடான்னா ஆர்மிகிற கேண்டின்கிற, ஓட்டல் பார்..ங்கிற.  புலம்பினான் ரமேஷ்.

விடுறா... நான் ஊரெல்லாம் சுத்துறவன். அதுனால எனக்கு இதெல்லாம் தெரியுது... சமாதன படுத்தினான் அறிவு.

நீ சொல்றதும் சரிதாண்டா... என்னையெல்லாம் எங்கடா ஊர சுத்த விடுறான் எங்கப்பன். மச்சி நான் ஒன்னு சொல்லட்டா... இருவது வருசமா நானும் திருச்சியில தான் இருக்குறேன் இதுவரை மலைக்கோட்டையே ஒரு தடவதான் பாத்துருக்கேன். நான் பிறந்து வளந்த ஊரையே ஒழுங்கா சுத்தி பார்க்க முடியவன் நான் எங்கடா படிச்சி வெளிநாடெல்லாம் சுத்தி பாக்க போறேன். சுதியேறியதில் கதி கலங்கி பேசினான் ரமேஷ்.

டேய் விடு மச்சி, நம்ம நண்பன் அறிவு இருக்கிறப்ப நீ ஏன் கவலைப் படுற... அவன் நினைச்சா நம்மல அழைச்சுட்டு போய் காட்ட முடியாதா..? இதுக்குப் போய் கண் கலங்கிட்டு இருக்கிற... மெதுவாக சமாதான போர்வையில் ஏத்தி விட்டான் குமார்.

அறிவு யோசித்தான்... கொஞ்சம் இரு வர்றேன்.

சென்றவன் கால் மணி நேரம் கழித்து வந்தான். கிளம்புகடா... இன்னக்கி திருச்சிய எவனும் பாக்காத கோணத்துல பாக்க போறிங்க.

குமாரும் ரமேஷ்ம் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

கிருத்துருவம் இன்னக்கு என்ன கூத்து பண்ண போவுதோ தெரியலையே... குமாருக்கு அடி வயிறு கலங்கியது.


எல்லாரும் ஓட்டலை விட்டு வெளியே வந்தனர். வெளியே பெரிய ட்ரையலர் லாரி ரோட்டை அடைத்து நின்றிருந்தது. திருச்சியை சுற்றி நிறைய தொழிற்சாலைகள் அமைந்திருப்பதால் இந்த லாரியை அடிக்கடி பார்க்கலாம். அறிவு சொன்னான், டேய் ஒவ்வொருத்தனா ஏறி வரிசையா படுங்க, இன்னக்கி இதுலதான் சுத்திப் பாக்க போறோம். எல்லாரும் பயத்துடனே ஏறி படுத்தனர், நல்ல வேளை பனிரெண்டு பேருக்கும் இடமிருந்தது. வண்டி நகர நகர, ஏ.சி போட்டது போல் காற்று வீசியது. வண்டியில் கடைசியாக படுத்திருந்த அறிவு சுற்றுலா கைடாக மாறி, இது தான் தில்லை நகர், இது தான் உறையூர், இப்ப மலைக் கோட்டை வரப்போகுது, என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

படுத்திருந்த ரமேஷ் சொன்னான்... சே இவ்வளவு அழகான வானத்தையும், நட்சத்திரத்தையும் என் வாழ்க்கையிலேயே பாத்ததில்ல அறிவு.

டேய் அறிவுன்னா சும்மாவா... குமார் பினாத்தினான்.

அறிவு பிறந்த நாள்னா எல்லாருக்கும் ஞாபகம் இருக்க வேணாமா... அறிவு எல்லாத்துலயுமே வித்தியாசமானவண்டா... அறிவு பதிலளித்துக் கொண்டே சென்றான்.


அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி : பட உதவி - கூகுள்

12 கருத்துகள்:

  1. அருமையான படைப்பு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது உண்மைதான். உலக அறிவும் பொது அறிவும் இருந்தால் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையையும் நன்றாக மாற்றி நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ வைக்க முடியும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் சமீபத்திய படைப்பான “மனதுக்குப் பிடித்த வேலை” என்பதிலும், இன்றைய இந்தப்படைப்பிலும், நல்ல பல கருத்துக்களைத் தாங்கள் கூற முற்பட்டுள்ளீர்கள். அதற்கு என் பாராட்டுக்கள்.

    இருப்பினும் இரு படைப்புகளிலுமே இளைஞர்கள் உற்சாக பானம் அருந்துவது ஒரு சாதாரண விஷயம் போலவே [ஏதோ காஃபி, டீ, ஜூஸ் அருந்துவது போல] காட்டப்பட்டுள்ளன.

    நடைமுறையிலும் அவை இன்று மிகச் சாதாரண விஷயங்களாகவே உள்ளன என்பதை நானும் மறுக்கவில்லை.

    இருப்பினும் அவற்றிற்கு முக்கியத்துவதும் கொடுக்காமலும், அவ்வாறு செய்வது தவறு என்றும் வலியுறுத்தி எழுதினால் தங்களின் படைப்புகள் மேலும் மெருகூட்டப்பட்டு, சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இன்னும் சிறப்பாக இருக்குமோ என சொல்ல நினைக்கிறேன்.

    தங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த என் கருத்தினை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கவும். இல்லாவிட்டால் இந்த என் கருத்தினை வெளியிடாமல் DELETE செய்து கொள்ளவும்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //இருப்பினும் இரு படைப்புகளிலுமே இளைஞர்கள் உற்சாக பானம் அருந்துவது ஒரு சாதாரண விஷயம் போலவே [ஏதோ காஃபி, டீ, ஜூஸ் அருந்துவது போல] காட்டப்பட்டுள்ளன. //

      உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். எனக்கும் மதுவை பற்றி எழுத சிறிது சஞ்சலம் இருந்தாலும் ட்ரயலரில் படுத்துக்கொண்டு சுற்றுலா செல்வது சுயநினைவு உள்ளவர்களின் செய்கையில்லை என்பதாலும், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்டதாலும், கதையின் போக்கு கருதி எழுதப்பட்டது. முடிந்தவரை நான் இதை தவிர்க்க முயல்கிறேன்.

      //தங்களுக்குப் பிடித்திருந்தால் இந்த என் கருத்தினை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கவும். இல்லாவிட்டால் இந்த என் கருத்தினை வெளியிடாமல் DELETE செய்து கொள்ளவும்.//

      என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்பதை விட, எனக்கு தங்களைப் போன்றவர்களின் உண்மையான கருத்துக்களே முக்கியம்.அதனால்தான் நான் Comment Moderation கூட வைக்கவில்லை. எனக்காக பொறுமையா கருத்தளித்த உங்களுக்கு நன்றி ஐயா.

      நீக்கு
    2. அன்புள்ள நண்பரே,

      வணக்கம். தங்களின் பதிலுக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.

      நானும் சிறுகதை சென்ற ஆண்டு 2011 ஜனவரி முதல் டிஸம்பர் வரை நிறைய கொடுத்துள்ளேன். பெரும் பாலும் நகைச்சுவைக்கதைகளாகவே இருக்கும்.

      எனக்கான வாடிக்கையான வாசகர்கள் ஓரளவு கணிசமான எண்ணிக்கையில் உண்டு. அதிலும் பெண்கள் சற்றே கூடுதலாக உண்டு.

      நான் என்னுடைய ஒரே ஒரு சிறுகதையில், அதுவும் நகைச்சுவைக்காகவே மட்டும், ஒரு க்தாபாத்திரம், தன் கவலைகளை மறக்க அன்று இரவு தனிமையில் ஒரு குவார்ட்டர் அடிக்கப்போவதாக எழுதியிருந்தேன்.

      அதையே பலரும் சுட்டிக்காட்டி so bad என கருத்து எழுதியிருந்தார்கள்.

      இணைப்பு இதோ:

      தலைப்பு :”எலி”ஸ்பத் டவர்ஸ். மொத்தம் 8 பகுதிகள்
      உற்சாக பானம் வருவது 7 ஆவது பகுதியில்.

      http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html
      பகுதி-1

      http://gopu1949.blogspot.in/2011/03/7-8.html
      பகுதி-7

      தங்கள் தகவலுக்காக மட்டுமே. பொதுவாக ஒரு சிலர் இவற்றை விரும்புவது இல்லை. எப்போதாவது ஒரு முறை தவிர்க்க முடியாத இடங்களில், நம் கதைகளில் இதைக்கொண்டு வரலாம் தப்பு ஏதும் இல்லை தான்.
      முடிந்தவரை தவிர்த்து விடலாமே என்று தான் Just ஆலோசனை சொன்னேன்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
    3. நன்றி ஐயா, எட்டு பாகங்களும் படித்தேன், மிகவும் நன்றாக இருந்தது.

      நீக்கு
  3. அழகான படைப்பு மிக அழகு..

    அறிவிடம் யாராவது உன்னை நம்பிதான் வந்துருக்கேன் என்று சொல்லிவிட்டால் போதும், அவர்களுக்காக எதுவும் செய்ய தயங்காதவன்
    //////////////////

    எங்க நண்பர் வட்டத்துக்குள்ளும் இப்படி ஒருத்தர் இருக்கிறார் ஆனா ரொம்ப ரொம்ப நல்லவரு அவரு..

    நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு. சிட்டுக்குருவி.

      ஒவ்வொரு நட்பு வட்டத்துக்குள்ளும் நிச்சயம் இப்படி ஒருவர் இருப்பார். மது அருந்தினாலும் என் அறிவழகனும் நல்லவன்தான் சார்.

      நீக்கு
  4. மிகவும் யதார்த்தமாக, அருமையாக எழுதுகிறீர்கள் சார்... தாங்கள் என் தளத்தில் இட்ட கருத்துரை மூலம், தங்கள் தளம் அறிந்தேன்... மிக்க நன்றி... Follower ஆகி விட்டேன்... இனி தொடர்கிறேன்...

    இங்கே கரண்ட் கட் 16 மணி நேரத்திற்கும் மேல்... அதனால் உடனே தங்களின் தளத்திற்கு வர முடியவில்லை... அங்கு சென்னையில் எப்படி...?

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன். நான் வெளியூர் சென்றிருந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை.

      //இங்கே கரண்ட் கட் 16 மணி நேரத்திற்கும் மேல்... அதனால் உடனே தங்களின் தளத்திற்கு வர முடியவில்லை... அங்கு சென்னையில் எப்படி...?//
      சென்னையில் இதுவரை அறிவிக்கப்பட்ட மின் வெட்டு ஒரு மணிநேரம் மட்டுமே. கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலியில் இருந்த பொழுதுதான் உங்கள் வேதனை தெரிந்தது. அங்கு 13 லிருந்து 16 மணிநேர மின் வெட்டு.

      நீக்கு
  5. நன்றாக உள்ளது. தொடர்ந்தும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண்பிரசாத்.

      நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்