செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி

மீண்டும் பரபரப்பாக மாறியிருக்கிறது கூடங்குளம். கடந்த வாரம் கூடங்குளம் மக்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதை தொடர்ந்து மீண்டும் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. இம்முறை மக்களுடன் பல்வேறு மீனவ அமைப்புகளும் இணைந்து ஆரம்பித்த போராட்டம் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று ஒரு உரிழப்புடன் ஓய்ந்திருக்கிறது.
பல்வேறு கட்சி தலைவர்களும் காவல்துறையின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 
அணு உலை ஆபத்தானது என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. அதே நேரம் இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இதே செயலைத்தான் காவல்துறையை வைத்து நிகழ்த்தியிருக்கும் என்பதிலும் ஐயம் கிடையாது.

கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டு, செயல்பட தொடங்கும் நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள், அணு உலை தீர்மானிக்கப்பட்ட காலத்தில் தொடுக்கப் பட்டிருந்தால் ஒருவேளை மக்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம். அப்போது சில போரட்டங்களுடன் அல்லது அரசின் சில சலுகைகள் அல்லது சில ஆசை வார்த்தைகளுக்காக நின்றுவிட்ட போராட்டம், இன்று மீண்டும் தொடர்வதால் இழப்பு மக்களுக்கே.

ஒரு போராட்டாம் வெற்றி பெருவது என்பது மக்களுடன் கூடிய தலைவர்கள் கையில் தான் உள்ளது. அப்படி தலைவர்களுடன் கூடிய மக்கள் போராட்டம் எல்லாமே வென்றதாக சரித்திரமும் கிடையாது. ஆனால் கூடங்குளத்தை பொருத்தவரை மக்களை போராட விட்டு தலைவர் எங்கே சென்றார் என்பது திகைப்பாய் இருக்கிறது. இந்த போராட்டத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாய், போராட்ட தலைவர் உதயகுமார் சொன்னதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகின்றன. இது உண்மையா? என்பது நமக்கு தெரியாது என்றாலும் இதையெல்லாம் மக்கள் முன் விளக்க வேண்டிய தலைவர் தலைமறைவாய் உள்ளது போராட்டம் தவறாக வழி நடத்தப் படுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.


அரசாங்கத்தை மற்றும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நிகழ்த்தப்படும் போராட்டத்தில் எதுவும் நிகழலாம் என்ற பொது அறிவு கூட இல்லாமல் சின்னஞ்சிறு குழந்தைகள், சிறுவர்களுடன் களத்தில் வீற்றிருந்த மக்களை காணும்போது, அவர்களுக்கு விளைவு தெரிவிக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார்களோ, என்று தோன்றுகிறது. போராட்ட களத்தில் காவல்துறை என்பது ஜல்லிக்கட்டு காளை போல, மூக்கணாங்கயிறு இழுத்து கட்டப்பட்டிருக்கும் வரை மட்டுமே நாம் சீண்ட முடியும். கயிறு அறுத்து விடப்பட்டால் அது யாரென்று பார்க்காமல் எதிர்பட்டவரையெல்லாம் துவம்சம் செய்துவிடக்கூடியது. ஒருவேளை தடியடி, துப்பக்கி சூடுகளால் சிறுவர்கள் யாராவது பாதிக்கப்பட்டால் இந்த தலைவர்கள் என்ன செய்வார்கள்? அடிபட்ட குழந்தைகளை படம் பிடித்து தன் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மற்ற நாடுகளிடம் நன்கொடை வசூலிப்பதை தவிர வேறென்ன செய்துவிட முடியும்.


ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய காலத்தில் கூட ஜாலியன் வாலாபாக் தவிர வேறெங்கும் அப்பாவி சிறுவர்கள் அடிபட்டதாக நான் படித்த நினைவில்லை. காந்தியடிகளின் முதிர்ச்சியான இது போன்ற போராட்டங்கள்தான் அவரது வெற்றிக்கு காரணமாயிருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிறுவர்களுக்கு அடிபட்டிருந்தால் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு போராட்டத்தை மேலும் சிக்கலாக்கியிருக்கலாம்.

இந்த போராட்டம் வெறும் கூடங்குளம் மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உள்ளடக்கியதாக இருந்திருந்தால், அரசாங்கம் ஒருவேளை அடிபணிந்திருக்கலாம். ஆனால் ஆட்சியாளர்கள் தனது தவறுகளை மறைக்க, இன்றைய மின்வெட்டு பிரச்சினைகளுக்கு கூடன்குளம்தான் காரணம் என்று நன்றாக மார்கெட்டிங் செய்துவிட்ட காரணத்தால், மற்ற மாவட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவு ஒருபோதும் இவர்களுக்கு கிடைக்க போவது இல்லை.

அதே சமயம் இந்த போராட்டத்தினாலும் சில பயன்கள் உண்டு.

  1. உதயகுமார் ஒரு அரசியல் கட்சி தொடங்க பயன்படலாம்.
  2. எதிர்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக கோஷமிட பயன்படலாம்.
  3. ஆளும் கட்சி பல தடைகளை தாண்டி மின் தட்டுப்பாட்டை போக்கியதா மார்தட்டிக் கொள்ள பயன்படலாம்.
  4. கூடங்குளம் காரணமாக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் சிக்கலை நீக்கி உறவை பலப்படுத்த மத்திய அரசுக்கும் பயன்படலாம்.

இது ஆட்சியாளர்களின் வெற்றி, மக்களின் தோல்வி. தோல்விக்கு மதிப்பில்லை, ஆதலால் மக்கள் + ஆட்சியாளர்களின் வெற்றி = மக்களாட்சியின் வெற்றி.


அன்புடன் முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்


4 கருத்துகள்:

  1. http://www.vinavu.com/2012/09/11/koodanlulam-update/

    இந்த போராட்டஅழ அரசுக்கெதிராக,காவல் துறைக்கேதிராக. உதய குமார் ஓடி ஒளியும் கோழையும் அல்ல.நிராயுதபாணியாக முன்னால் வந்து குண்டடிபட்டு சாகும் முட்டாளும் அல்ல. தன் அறிவுத் திறனால், தலைமைப்பண்பால் இந்த போராட்டத்தை பின்னால் இருந்து அவர் இயக்குவதுதான் வெற்றிக்கு வழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ரமேஷ்.
      போராட்ட களத்தில் நின்று காவல்துறையிடம் சரணடைந்திருந்தால் யாரும் அவரை சுடப் போவதில்லை. ஒரு தலைவனின் கட்டுப்பாடு இல்லாமல் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல் ஆளாளுக்கு காவல்துறை சீண்ட ஆரம்பித்தது தான், இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். ஒருவேளை உதயகுமார் அங்கு நின்றிருந்து இவர்களை கட்டுப்படுத்தி இருப்பரேயானால், காவல்துறை அவரை கைது செய்திருக்கும். ஆனால் இது போன்ற மிக சென்சிட்டிவான போராட்டத்தில் நிச்சயம் காவல்துறையால் அவரை சுட முடியாது என்று நம்புகிறேன். ஒரு கூட்டத்தை போராடவிட்டு தான் மறைந்திருப்பது என்பதுதான் தலைமைப்பண்பு என்று நினைக்கிறீர்களா? மிதவாத போராட்டத்தில் ஈடுபட நினைக்கும் யாரும் தொண்டர்களோடு தானும் சிறை படவே விரும்புவார்கள். தீவிரவாத போராட்டத்தில்தான் தலைவர்கள் திட்டம்போட்டு தொண்டர்களை நிறைவேற்ற சொல்லி அவர்களை காவு கொடுப்பார்கள்.
      நீங்கள் இணைத்திருக்கும் சுட்டியில் உள்ள தகவல் இன்று பத்திரிக்கயாளர் பேட்டிக்குப்பின் நடந்தது என்று நினைக்கிறேன். இன்றிரவு சரணடைகிறேன் என்று சொல்லி மீண்டும் மாயமானதாக தொலைகாட்சிகளில் தெரிவிக்கப்படுகிறது. வெற்றி பெற வேண்டி போராட்டத்தின் பின்நின்று இயக்க நினைப்பவர் ஏன் சரணடைய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

      நீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள் முத்துக்குமார். போராடுபவர் சாதாரண ஆள் இல்லை. அமெரிக்காவில் வேலை செய்தவர். அவர் தெருவில் இறங்கி மக்களுக்காகப் போராட வேண்டிய அவசியமே இல்லை. ஆதாயம் இல்லாமல் எதிலும் இறங்கமாட்டார்கள் இவர் போன்றவர்கள். முன்பு போல் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் இப்போது இல்லை பாருங்கள். ஏன்? இதற்குப் பின்னணியில் பெரிய மாஸ்டர் பிளான் இருப்பதாக யூகிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு. அருள்.

      நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்