புதன், 12 செப்டம்பர், 2012

ஒரு லட்சம் முதலீடு

மாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்று லட்சத்திற்க்கு எங்கே போவது...? வியாபாரத்தை  இழுத்து மூடியாயிற்று, மிச்சம் மீதியாக கையில் உள்ளது ஒரு லட்சம் மட்டுமே. குடும்ப பாரம் சுமக்க இயலாதவாறு அழுத்துகிறது. அரசு வேலைக்காக முற்ச்சித்தால் மூன்று லட்சம் கையூட்டாக கேட்கிறார்கள்...

செய்வதறியாமல் பூங்காவில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான்.

மாறனுக்கு வியாபாரத்தின் மேல் ஆசை. ஆனால் என்ன செய்வது சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நிரந்தரமில்லாத வியாபாரத்தை விட குறைந்த வருமானமானாலும் நிரந்தரமான அரசு வேலைக்கு செல்ல மனைவி நிர்பந்திக்கிறாள். மாறனோ குடும்பத்திற்க்காக மனதிற்க்கு பிடிக்காத வேலைக்கு செல்ல நினைத்தாலும் லஞ்சம் பூதமாக நின்று பயம் கொள்ள செய்கிறது.

பின்புறம் ஆளரவம் கேட்டு திரும்பி பார்த்தான் மாறன். மரத்தின் பின்புறம் எதிர் வீட்டு முருகேசன் தாத்தா வந்தமர்ந்தார். அவருக்கு வயது எழுபது. சாயந்திரம் ஆனால் முருகேசன் நண்பர்களுடன் அளவளாவ பூங்காவிற்க்கு வந்து விடுவார். ஒரு கிழ மாநாடே நடக்கும். முருகேசன் தாத்தா ஒரு பிஸினஸ்மேன். பல வியாபாரங்களை நடத்தி வருகிறார். அவரது பிள்ளைகள் தற்போது அதை நிர்வகித்து வருகிறார்கள். வாழ்வில் எந்த குறையும் இல்லாத மனிதர்.

ம்ஹூம்... நல்ல பணக்கார வீட்டில் பிறந்தவர் போல....நம்மை போல தனியாளாக போராடியிருந்தால் தெரியும் கிழவனுக்கு... மாறன் நினைத்துக்கொண்டான்.

வாடா ராமு என்ன ரெண்டு நாளா ஆள காணோம்...முருகேசன் குரல் கேட்டது.

மீண்டும் எட்டி பார்த்தான் மாறன். முருகேசனின் பிஸினஸ் பார்ட்னர் ராமனாதன் அவர்களது மற்றொரு நன்பர் விக்டருடன் வந்து கொண்டிருந்தார்.


ம்ஹூம்... கிழவர்களின் கச்சேரி ஆரம்பிக்க போகிறது. மாறன் அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து அமர்ந்தான்.

டேய் விஷயம் தெரியுமா உனக்கு... நம்ம சீனு நேத்திக்கு போய் சேந்துட்டான். ராமனாதன் சொன்னார்.

என்ன...? முருகேசனின் குரலில் அதிர்ச்சி

ஆமாண்டா நேத்திக்கு என் பேரனுக்கு ட்ரஸ் எடுக்க டவுனுக்கு போயிருந்தேன். அப்போ சீனு மகன் பூக்கடையில நின்னுட்டு இருந்தான். என்னடா விஷேசம்னு கேட்டா, அப்பா போயிட்டாரு மாலை வாங்க வந்தேன்னான். அப்படியே நான் போயி பார்த்துட்டு வர ரொம்ப லேட் ஆயிடுச்சு. அதான் நேத்து வர முடியல.

கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.

சின்ன பசங்கள விட கிழவனுங்களுக்கு தான் சாவுன்னா பயம். பாரு எமதர்மன நேர்ல பார்த்த மாதிரி கம்முனு உக்கார்ந்திருக்குதுங்க... மாறன் மனதிற்க்குள் சிரித்துக் கொண்டான்.

என்னப்பா அமைதியாயிட்ட... விக்டர் மௌனத்தை கலைத்தார்.

ஒன்னுமில்ல விக்டர். சீனுவ உனக்கு தெரியுமில்ல.

நல்லா தெரியும்.

அவன் என்னோட முதல் பார்ட்னர்னு தெரியுமா...

கேள்வி்பட்டதில்லையே.

ஆமா அவனும் நானும் முதல் முதலா ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சோம்.

கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தான் மாறன்.

ஆனா எங்களுக்கு நஷ்டம். பொருள வாங்கினவங்க பணத்தை திருப்பி தரல. அதுக்கு மேல நஷ்டத்தை தாங்க முடியாம கடைய சாத்திட்டோம்.

ம்.. அப்புறம்.

ஆனாலும் வாழ்க்கையை ஓட்ட ஏதாவது பண்ணியாகனுமே, மீண்டும் வேற பிஸினஸ் ஆரம்பிக்க ஒரு ப்ராஜக்ட் ரெடி பண்ணி சீனுட்ட பேசினேன். ஆனா சீனு அதுக்கு ஒத்துக்கலை.

ஏன்... ? விக்டர் கேட்டார்.

சீனுக்கு வீட்ல பிரச்சினை. அவங்க அப்பாவேட அரசு வேலை அவனுக்கு கிடைச்சிட்டதால, இதில ஆர்வமில்ல. எனக்கு அவ்வளவு பணம் போடற அளவு கையிருப்பு இல்ல. அப்பதான் ராமனாதன் நட்பு கிடைச்சு, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பிஸினஸை ஆரம்பிச்சோம்.

அப்படியா... அதனால சீனுக்கு உன்கிட்ட கோபமா?

அப்படியில்ல, நாங்க பிசினஸ் ஆரம்பிச்ச பின்னாடியும் எப்பவும் போல சாயந்திரமான இங்க உக்காந்து அரட்டையடிச்சிக்கிட்டுதான் இருப்போம். சீனு நிறைய ஐடியா எல்லாம் கொடுப்பான். அவனுக்கு பிஸினஸ்ன்னா உசிறு. முதல் அஞ்சு வருசம் நாங்க ரொம்ப சிரமபட்டோம். அப்புறம் மேல போக போக, சீனு தடுமாற ஆரம்பிச்சிட்டான். ஏதே அப்போதைக்கு குடும்பத்த கவனிக்க வேலைக்கு போய் ஆரம்பத்தில ஓரளவு சம்பாதித்தாலும், எங்களோட வசதி வாய்ப்புகள் உயர உயர, தான் தப்பு செஞ்சிட்டோம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டான்.

அதுக்கு நீங்க என்ன செய்வீங்க. சூழ்நிலைகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கற யாரும் வளர வழியில்லன்றது சீனுக்கு தெரியாதா? சில பல சலுகைகளுக்கு ஆசைப்பட்டு இலக்கை கைவிடறவங்களுக்கு வாழ்க்கையே போராட்டம்தான்றதை சீனு உணரலையா.

நீ சொல்றது சரிதான் விக்டர். ஆனா நாங்க இன்னைக்கு ஜெயிச்சிட்டதுனால உன்னால உணர முடியுது. ஆனா நாங்க தோத்து போயிருந்தா, எங்க குடும்பமே எங்கள காரி துப்பியிருக்காது..? அந்த பயம்தான் சீனுக்கு. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்றதால அவனுடைய இயலாமை கோபமா மாறிடுச்சு.... எங்க மேலயில்ல, அவன் குடும்பத்து மேலேயே.

அப்புறம்... விக்டர் ஆர்வத்துடன் கேட்டார்.

யார்கிட்டயும் ஒழுங்கா பேசுறதில்ல. தனிமையிலேயே இருக்க ஆரம்பிச்சான். பிள்ளைகள் கூட அவன்கிட்ட பாசமாயில்ல. மொத்ததில வாழ்க்கையே நரகமாயிருச்சு.

கொடுமை... பாவம் சீனு.

நிச்சயமா சீனு பாவம். அவன் இறந்ததுக்காக நான் வேதனைப்படலை, ஏன்னா அவன் இது மாதிரி வேதனைகள்ல இருந்து விடுதலையாகிட்டான். ஆனா ஒரு நல்ல நண்பனை இழந்ததுக்காக கண்ணீர் சிந்துறேன்.

மாறன் கண்களில் கண்ணீர்... ஒரு தீர்மானத்துடன் எழுந்தான்...என்னால வாழ்க்கை முழுவதும் கண்ணீர் விட முடியாது. இந்த ஒரு லட்சம் தான் என் முதலீடு, என்ன கஷ்டம்னாலும் என் இலக்கை கைவிடப் போவதில்லை.



அன்புடன் 
முத்துக் குமரன்.

 நன்றி : பட உதவி - கூகுள்

8 கருத்துகள்:

  1. இந்தக்கதை அழகாக எழுதப்பட்டுள்ளது. இன்றைய சமுதாய இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்.

    இதே கதையின் கருத்தினை முற்றிலும் வேறுபட்ட ஒரு கோணத்தில், விறுவிறுப்பக நானும் எழுதியுள்ளேன். இன்னும் என் வளைத்தளத்தில் அதனை பதிவிடவில்லை.

    அனுபவஸ்தர்கள் வாயிலாக மாறனுக்கு தன்னம்பிக்கை ஏற்படச் செய்துள்ளது அழகு.

    லஞ்சம் கொடுத்து அரசாங்க வேலை பெறுவதை விட அதே பணத்தில் சொந்தமாக, ஆர்வமாக, விடாமுயற்ச்சியுடன் தனக்குத் தெரிந்த ஒரு தொழிலில் இறங்கி சிறப்புடன் வாழ்வது சிறந்தது என்பதை வலியுறுத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    தொடர்ந்து இதுபோல நல்ல கருத்துக்களை வலியுறுத்தி எழுதுங்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    [தங்களின் பதிவினில் "word verification" என்ற ஓர் தொல்லை உள்ளது. அது கருத்துக்கள் கூற வரும் என் போன்றவர்களுக்கு, மிகவும் எரிச்சல் தரக்கூடிய ஒன்று.

    அதனை முதலில் நீக்கி விடுங்கள். பிறகு உங்கள் படைப்புகளுக்கு, மேலும் சிலர் கருத்துக்கள் கூற வருவார்கள்.]


    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா. நிச்சயம் "word verification" ஐ நீக்கி விடுகிறேன்.

      நீக்கு
  2. முயற்சி முயற்சி முயற்சி தேவை ...
    அழுந்த கால் பதிக்க முதலில் வலி இருந்தாலும் அப்புறம் வசந்தமாகும் என்பதை மிக எளிமையாய் சொல்லிய விதம் சிறப்பு .. வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு அரசன் சே

      நீக்கு
  3. சின்ன பசங்களை விட கிழவனுகளுக்கு தான் சாக பயம்....

    இந்த உண்மையே பதிவிற்கு நல்ல ஆதாரம் கொடுத்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. சூழ்நிலைகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கற யாரும் வளர வழியில்ல

    சில பல சலுகைகளுக்கு ஆசைப்பட்டு இலக்கை கைவிடறவங்களுக்கு வாழ்க்கையே போராட்டம்தான்

    சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்