புதன், 2 ஜனவரி, 2013

புத்தாண்டு கொண்டாட்டம்


ஆங்கில புத்தாண்டு என்றாலே ஒரு குதூகலம். நகரங்களில் திருவிழா கோலம்தான். கிராமங்களில், அன்று ஒருநாள் அரசு விடுமுறை அவ்வளவுதான், தவிர தமிழ் புத்தாண்டுக்கு மட்டுமே அங்கு மரியாதை. எனக்கு சிறுவயது முதலே பண்டிகை நாட்கள் என்றாலே அலர்ஜிதான். அதற்கான காரணங்கள் பொதுவெளியில் பகிர தக்கதல்ல என்பதால் விட்டுவிடுவோம்.

சென்னை வந்த பின்புதான் புத்தாண்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டென்பது புரிந்தது. அதுவும் புத்தாண்டு கொண்டாடாதவன் பேச்சிலர் வாழ்க்கைக்கே லாயக்கற்றவன் ஞானம் போ(தி)தை மரத்திற்க்கடியில் கிடைத்தது. புத்தாண்டுக்கு ஒருவாரத்திற்க்கு முன்பே அக்கம் பக்கத்து அறைகளில் உள்ள நண்பர்கள் குழுமி எப்படி கொண்டாடுவது என்பதை தினம் இரவு சிந்தித்து சிந்தித்து, கடைசியில் 31ம் தேதி இரவு சாரி மச்சி கையில காசு இல்ல அடுத்த முறை கொண்டாடிக்கலாம் என்று கழன்று கொள்ளும் நண்பர்களை ஒருவழியாக சமாதானப்படுத்தி, வாடா மச்சான் காக்கை போல பகிர்ந்து உண்போம் என்று ஒரு ஃபுல் வாங்கி பல பங்காக்கி அறைக்குள்ளேயே குடித்த பின்பு, ஒவ்வொருவராக மச்சான் ஒன்னுமே பத்தலடா இன்னும் கொஞ்சம் வாங்குனா நல்லாருக்கும் என்று பினாத்த, காசு இல்ல என்று கழன்ற உத்தம நண்பர்கள், ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்று, கடன் வாங்கி வருவதைப்போல சரக்கு வாங்கி வந்து மீண்டும் பகிர்ந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டு தூங்கியெழும் பொழுது ஒன்றாம் தேதி மாலையாகி இருக்கும். ஓரிரு வருடங்கள் பீச்சில் அமோகமாக கொண்டாடி, லத்தியடி வாங்கி மல்லாந்து படுக்க முடியாமல் குப்புற படுத்துறங்கியே புத்தாண்டை நிறைவு செய்ததும் உண்டு. இது போல வருடத்தின் கடைசி நாள் கசப்பான நிகழ்வுகளுடன் முடிந்திருந்தாலும் அடுத்தடுத்து வந்த வருடங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது என்பது உண்மை.

காலங்கள் மாறி பேச்சிலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வந்ததும், கொண்டாட்டக்கள் மாறி அதிகபட்சம் ஒரு கோவிலுக்கு போவது மட்டுமே புத்தாண்டு என்றானது. சில முறை மனம் புண்பட்ட சில நேரங்களில் எங்காவது தனிமையில் அமர்ந்து புத்தாண்டு வான வேடிக்கைகளை அமைதியாக ரசித்து நண்பர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு புத்தாண்டை நிறைவு செய்ததுண்டு.

இவ்வருடமும் அப்படியே வாழ்வில் எதிர்பாராத சில சருக்கல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனிமையில் இனிமை காண இருசக்கர வண்டியில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சிறிய மைதானம் நோக்கி சென்றேன். வழியெங்கும் மதுபானக்கடைகள் நிறம்பி வழிந்து கொண்டிருந்தன. வாங்கியவர்களில் சிலர் கடை அருகிலேயே நின்று அவசர அவசரமாக ஊற்றி குடித்து விட்டு, தெரிந்தவர் தெரியாதவர் பேதமின்றி, தலீவா.... ஹாப்பி நுயூ யேர்... என்று குழறி கொட்டிக்கொண்டு இருந்ததை பார்த்துக்கொண்டே, மைதானத்தை அடைந்தேன். ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு மண் தரையில் செருப்பை வைத்து அதன் மீது அமர்ந்தேன். மைதானத்தில் வழக்கத்தை விட சற்று அதிக கூட்டம். இருளில் ஆங்காங்கே இளைஞர்கள் கூட்டம், உற்று பார்த்த பொழுது எல்லேரும் அங்கேயே மது விருந்து நடத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. நான் அமைதியாக நிலவை ரசிக்க ஆரம்பித்தேன். பாஸ்.... தீப்பெட்டி இருக்கா...? ஒரு இளவயது குடிமகனின் கேள்வி. இல்லை என்ற என் பதிலில் அவன் முகத்தில் ஏமாற்றம். மீண்டும் அவன் நண்பர்களிடம் சென்றவன் சே... ஏண்டா இவ்வளவு செலவு பண்ணவனுங்க ஒரு தீபெட்டி வாங்கிட்டு வரமாட்டிங்களா? கண்டவங்கிட்ட கையேந்த வக்கிறீங்க என்றபடி அருகில் இருந்த சுவற்றில் காலி பாட்டிலை ஓங்கி அடித்து உடைத்தான். இவன் பிரச்சினை தீபெட்டி அவனிடம் இல்லாததா? இல்லை என்னிடம் இல்லாததா? யோசித்துக்கொண்டே வேறு திசை நோக்கினேன். ம்.... நான் இது போல கூத்தடித்த போது, இப்போது நான் இருக்கும் நிலையில் யாராவது அங்கு அமர்ந்திருக்க கூடும் என்ற நினைப்பு எனக்கு சிரிப்பை தந்தது.

மணி சரியாக பதினொன்று பத்து, கர கர என்ற சத்தத்துடன் யாரே பேசுவது கேட்டது. சத்தம் வந்த பக்கம் திரும்பினேன். மாநகர காவல் என்ற நாமகரணத்துடன் ஒரு நாற்சக்கர வண்டி வேகமாக மைதானத்தினுள் ஏதே ஒரு அறிவிப்புடன் வந்து கொண்டிருந்தது.  அருகில் வந்ததும் மீண்டும் அறிவிப்பு. ஏண்டா.... தே..... பசங்களா. உங்களுக்கு எங்க குடிக்கிறதுன்னே தெரியாதா...? இந்த நேரத்துல இங்க என்ன ஊ........ ...... ....... இனி எல்லாமே சென்சார் தான்.

ம்.... இந்த வருட கடைசியில் மீண்டும் ஒரு அர்ச்சனை. என் மனதில் பெரிய சந்தோஷம்.... நான் அடுத்த வருடம் நிச்சயம் ஏதோ ஒரு முன்னேறத்தை சந்திக்கப்போகிறேன். இந்த கடைசி அர்ச்சனையுடன் என் பீடை ஒழிந்தது போன்ற திருப்தி. கடவுளுக்கு நன்றி.

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள் (சற்று தாமதமாக).


அன்புடன் முத்துக் குமரன்.

2 கருத்துகள்:

  1. பூத்த புத்தாண்டு அனுபவம் புதுமையானது...
    இந்த ஆண்டு சிறப்பாக நீங்கள் நினைத்தவைகள் அனைத்தும் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்