வெள்ளி, 11 ஜனவரி, 2013

உயிர் வலி


உருண்டு புரண்டு
படுத்தாலும்,
விழி இரண்டும்
துஞ்சவில்லை.
இமை இழுத்து
போர்த்தினாலும்,
இவ்வுலகம் இன்னும்
இருளவில்லை.


குழந்தையென அவளை
நினைத்து,
ஆடிப்பாடி நான்
மகிழ்விக்க,
பொம்மையென எனை
நினைத்து,
வீசிய துயரம்
தாங்கவில்லை.
 

மன திரையில்
காட்சிகளாய்,
காலம் சென்ற
நினைவலைகள்.
அழிக்க மனம்
கூடுதில்லை,
நெருஞ்சி முள்ளாய்
வேதனைகள்.


தூக்கம் மறந்து
விழியிரண்டும்,
நெருப்பு குழம்பாய்
தகித்தாலும்,
ஏக்கம் மறந்து
துஞ்சும்நிலை,
என்றும் வர
போவதில்லை.


நெஞ்சில் அவள்
மூட்டியதீ,
வெந்து தணிந்து
அணைந்தாலும்,
அவள் அணைய
வாய்பில்லை,
இந்த உயிர்
நீங்குமட்டும்.


மன அடுப்பின்
வேதனைகள்,
முக பானையில்
பொங்கியதால்,
கேள்வி கேட்ட
வாய்களுக்கு,
பதில் சொல்லி
மாளவில்லை.


இற்று போன
நினைவுகளின்,
பற்று போக
மறுப்பதினால்,
உயிர்விட்டு வந்து
சேரும்படி,
மறுவுலகம் எனை
அழைக்கிறது.

அன்புடன் முத்துக் குமரன்.
 நன்றி : பட உதவி - கூகுள்

2 கருத்துகள்:


  1. உருண்டு பிரண்டு உடல்உயிரை
    உருக்கும் காதல் கவி..படித்தேன்!
    இருண்டு போகும் வரிகளினால்
    இந்த விருத்தம் படைக்கின்றேன்
    மருணடு கிடக்கும் மனக்கூட்டில்
    மணக்கும் தமிழை நிரப்பிடுக!
    இருந்து வாட்டும் நினைவலைகள்
    இன்பத் தமிழாய் பிறந்திடுமே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் எழுதிய விருத்தம், நிச்சயம் போக்கும் வருத்தம். தொடர்ந்து என் கவிதைக்கு ஆதரவளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்