ஊருக்கு நடுவே அமைந்திருந்த ஆலமர கோர்ட் கூட்டிப்பெருக்கி ஜமுக்காளம் விரித்து மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு வீடு நாற்காலி, பெஞ்ச்செல்லாம் சேகரித்து முக்கியஸ்தர்கள் உக்கார போடப்பட்டிருந்தது. மிராசு வருகையை எதிர்பார்த்து கூட்டம் ஒருபுறமாக நின்று கொண்டிருந்தது.
ஏம்பா... பெஞ்செல்லாம் சும்மாத்தான கிடக்கு, உக்கார வேண்டியதுதான...? வேலுச்சாமி வாத்தியார் கேட்டார்.
இடுப்பு செத்தவந்தான் உக்காருவான், நாங்கல்லாம் எலம் சிங்கமில்ல... கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வந்தது.
வேலுச்சாமி நொந்து போனார். இங்க வாத்தியாரா வந்து பதினஞ்சு வருசமாச்சு. ஆனா எவனும் உருப்புட்ட மாதிரியே தெரியல. படிச்சு முடிச்சு போனவந்தான் எதித்து பேசுறான்னா, புதுசா வந்து சேர்ற குஞ்சுக்குளுவானெல்லாம் எகத்தாளம் பேசுது.
சரி பிராது கொடுத்தது யாருப்பா...? வேலுச்சாமி கேட்டார்.
எல்லாம் ஓங்கிட்ட படிச்ச சரவணந்தான்... மீண்டும் அதே குரல்.
ஏய், சரவணன்னு சொல்லுங்கப்பா... அதவுட்டுட்டு எங்க படிச்சான், யாருகிட்ட படிச்சான்னெல்லாம் விளக்கம் கொடுக்கிறீய, சொல்லிகுடுத்த படிப்பெல்லாம் ஒழுங்கா படிச்சுபுட்டியலோ...? வேலுச்சாமி கடுப்புடன் கேட்டார்.
கூட்டம் சலசலத்தது அடங்கியது. மிராசு வந்து ஜமுக்காளத்தில் அமர்ந்தார். என்னப்பா கொஞ்சம் நாளா எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்துச்சின்னு நிம்மதியா இருந்தேன். அதுக்குள்ள பஞ்சாயத்த கூட்டிட்டிங்க. பிராது கொடுத்தது யாரு.
நான்தாங்க... சரவணன் முன்னால் வந்தான். சரவணன் பட்டாளத்துல இருந்தவன். கல்யாணத்துக்காக ஊருக்கு வந்தவன, உயிரோட இருக்குற ஒரே பிள்ளைன்னு காரணம் சொல்லி அவனோட அப்பா பட்டாளத்துல இருந்து விடுவிக்க சொல்லி ஒருவழியா ஊரோட தங்க வச்சிட்டாரு. சரவணன் பேருக்கேத்த மாதிரி அழகா, நிறமா இருப்பான். அவன் மனைவி செல்லம்மா நல்லா லட்சணமா, ஆனா உடம்பு பூரா ரோமத்தோட, கருப்பா இருப்பா. செல்லம்மாக்கு அண்ணன் மட்டுந்தான், ஆனா அவள பேருக்கேத்த மாதிரி செல்லமா வளத்தான். சரவணனோட அப்பா, சரவணனுக்கு புள்ள பொறந்த கொஞ்ச காலத்திலயே இறந்து போயிட்டாரு. செல்லம்மாவோட அண்ணன் ஒரு மாசம் முன்னாலதான் போய்சேந்தாரு. செல்லம்மாக்கு இப்போ ஏன்னு கேட்க கூட நாதியில்ல.
சரி விசயத்த சொல்லுப்பா.
இனிமே நான் என் பொண்டாட்டியோட வாழ முடியாதுங்க. பாத்து பிரிச்சிவுட்டுருங்க.
என்னய்யா இது மொட்டையா சொன்னா எப்படி? உன்ன எதுத்து அடிச்சிப்புட்டளா..?
இல்லங்க.
உங்காத்தாளுக்கும் அவளுக்கும் ஏதாவது சண்டையா...?
அதெல்லாம் ஒன்னும் இல்லங்க.
இல்ல தொடுப்பு ஏதும் இருக்கா...?
அய்யய்யே அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க.
பின்ன என்னதாய்யா பிரச்சினை..?
நான் கல்யாணத்தன்னக்கு தாங்க பட்டாளத்துல இருந்து வந்தேன். செல்லம்மாவ பாத்த ஒடனே பிடிக்கல... கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னுட்டேன். எங்காத்தாதான், வேறவழியில்ல இப்போதைக்கு இவள கட்டிக்க, கொஞ்சம் நாள் ஆன பின்னால வேற அழகான பொண்ண கல்யாணம் கட்டி வக்கிறேன்னு சொன்னுச்சி. இவ்வளவு நாளா எங்காத்தா சொன்னத செஞ்சுபுடும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நேத்து கொடுத்த வாக்க மீறி இவதான் என் மருமவ வேறயாரையும் நான் கட்டிவக்கெ மாட்டேன்னுருச்சி. நீங்க தான் ஒரு நல்ல தீர்ப்பை சொல்லனும்.
என்னம்மா சொல்ற நீ...? மிராசு ஆத்தாகாரியை கேட்டார்.
அவன் சொல்றதெல்லாம் நிஜதாங்க. நீ பாத்து வக்கிறத கட்டிகிறேன்னான். நானும் நல்ல குடும்பத்து பொண்ணா பாத்துதான் கட்டிவச்சேன். கல்யாணத்தன்னக்கி, பொண்ணு கருப்பா இருக்கு புடிக்கலைன்னுட்டான். அவன சமாதனப்படுத்த என்னவோ சொல்லப்போயி இன்னக்கி இங்க வந்து நிக்கிற மாதிரி ஆயிடுச்சு. புள்ள பொறந்தா திருந்திடுவான்னு நெனச்சேன். புள்ளதான் ஒன்னுக்கு ரெண்டாச்சி, ஆனா இவன் இன்னும் திருந்தல. பாத்து புத்தி சொல்லி அனுப்பிவுடுங்க.
ஏம்பா சரவணா... செல்லம்மாவையும் அவ குடும்பத்தையும் எல்லாருக்கும் தெரியும். அவளுக்குன்னு இருந்த ஒரே உறவும் இல்லாம போச்சு, அவள தாங்கி நிக்க வேண்டிய நீ, இதுதான் சமயம்னு உட்டுட்டு ஓட நினைக்கிற, உன் ரெண்டு புள்ளங்கள வச்சுகிட்டு அவ எங்கப்பா போறது, மிராசு கேட்டார்.
அவங்கல்லாம் வேணுமின்னா எங்காத்தா கூட இருந்துகட்டும், நான் வேற ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு என் வயகாட்டு பக்கத்திலயே குடிசைய போட்டு தங்கிகிடுறேன்.
யோவ் புரிஞ்சிதான் பேசுறியா..? ஒருத்திய கல்யாணம் பண்ணி, அவளையும் அவ சொத்தையும் நல்லா அனுபவிச்சுட்டு, ரெண்டு புள்ளையையும் கொடுத்துட்டு, கரும்ப கடிச்சி சக்கைய துப்புற மாதிரி இப்ப எனக்கு வேணான்னா என்னய்யா அர்த்தம்...? மிராசு கடுப்புடன் கேட்டார்.
ஐயா, இத்தன வருசம் செல்லம்மாவுக்கு, நான் என்னோட வாழ்க்கையையே பிச்சையா போட்டுருக்கேன். கொஞ்சம் நாளாவது நான் விரும்புன வாழ்கைய வாழ நினைக்கிறது தப்பா...?
என்னது பிச்சை போட்டுருக்கியா...? நீ சீட்டாடுனதெல்லாம் அவன் சொத்துலதான்னு மறந்துட்டு பேசுறியா...? வேணுமின்னா வச்சுகிறதுக்கும் வேணான்னா வெட்டிவுடுறதுக்கும் வாழ்க்கை என்ன கண்ணாமூச்சு விளையாட்ட...? மிராசு இவன் எவளோ கூத்தியாகிட்ட மயங்கி கிடக்குறான் போல. வெட்டு ஒண்னு துண்டு ரெண்டுன்னு பேசி முடிங்க, வேலுச்சாமி வாத்தியார் கோபத்தில் கத்தினார்.
செல்லம்மா கண்ணில் நீரோடு மௌனமாக நின்றாள்.
ஏம்பா... சரவணா, நீ பட்டளத்துல நாட்ட காப்பாத்துற வேலையில இருந்தவன்னு மரியாத கொடுத்தா, நீ வீட்ட காப்பாத்தவே வக்கில்லாதவனா இங்க வந்து நிக்கிறியேப்பா... ஒழுங்கா வீட்டுக்கு போய் குடும்பம் நடத்துற வழிய பாரு. இன்னொரு முறை வெட்டுவுடுங்கன்னு பிராது கொடுத்த..., கம்முனாட்டி ஒன்னயே வெட்டிபுடுவேன்...வேல வெட்டியில்லாத பய... கோபம் கொப்பளிக்க எழுந்து சென்றார் மிராசு.
வீட்டுக்கு சென்ற செல்லம்மா, உடல் முழுதும் சீமண்ணையோடு சரவணன் முன் வந்தாள். இந்தாய்யா என்ன அப்படியே கொளுத்து. என்னோட வாழ பிடிக்கலைன்னா இப்படியே கொளுத்திட்டு, காரியத்த முடிச்சிட்டு போய் அந்த கூத்தியா கூட குலாவு. அதவுட்டுட்டு இப்படி ஊருக்கு மத்தியில கொண்டுபோய் வச்சி அசிங்க படுத்திட்டியே... புடியா தீபொட்டிய கொளுத்து... உனக்கு பயமாயிருந்தா நானே கொளுத்திக்கிறேன் விடு.
அவள் வேகமாக பற்ற வைத்த தீக்குச்சியை பாய்ந்து தட்டிவிட்டான் சரவணன்.
ஆனால் சிதறிய தீ கங்கு செல்லம்மா மேல் விழுந்து குப்பென பற்றியது. சரவணன் கதறியபடியே அவள் மேல் சாக்கு துணியை போர்த்தி புரட்டினான். இருவருக்கும் தீக்காயம் சத்தம் கேட்டு ஓடிவந்த கூட்டம் இருவரையும் ட்ராக்டரில் அள்ளி போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியது.
மருத்துவமனையில் கட்டிலில் வாழையிழையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் செல்லம்மா. தடுப்புத்திரைக்கு அடுத்து, மற்றொரு கட்டிலில் படுத்திருந்தான் சரவணன்.
டாக்டர், இன்ஸ்பெக்டரிடம் சொன்னார், சார் அந்த ஆளுக்கு காயம் அதிகமில்ல, ஆனா அந்த லேடிக்கு என்பது சதவீத தீக்காயம் ஆயிடுச்சி. ஸ்டேட்மெண்ட் வாங்குறதுனா வாங்கிக்கங்க, ரொம்ப நேரம் தாங்காது.
இன்ஸ்பெக்டர் அவளிடம் வந்தார், என்னம்மா பிரச்சினை...? நீயே வச்சுகிட்டியா... இல்ல யாராவது கொளுத்திவுட்டாங்களா...? உம் புருசனுக்கும் காயமாயிருக்கு அவந்தான் கொளுத்திபுட்டானா...? வரிசையாக பழகமான கேள்விக்கணைகளை தொடுத்தார்.
வலியின் முனகலோடு மெதுவாக சொன்னாள், நானாதான்யா கொளுத்திக்கிட்டேன். எம்புருசன் ரொம்ப நல்லவரு, என்ன காப்பாத்த வந்து காயப்பட்டு போய்ட்டாரு. அவர ஒன்னும் பண்ணிபுடாதீங்க... நான் அவர பாக்கலாங்கலா...?
இன்ஸ்பெக்டர் புரிந்தது, அவரு இது போல பல கேஸ் பார்த்தவரு. பக்கத்து கட்டில இருந்த சரவணன பேச சொல்லிட்டு வெளியே போனார்.
கண்ணில் நீரோடு மெதுவாக அருகில் வந்து அமர்ந்தான் சரவணன். என்ன செல்லம்மா இப்படி பண்ணிட்ட... அழுகையோடு கேட்டான்.
நீ எப்ப பஞ்சாயத்துல எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டதா சொன்னியோ, அப்பவே என் உசிரு போச்சு. இப்ப போலிஸ்ல இருந்து காப்பாத்துனது உன் மேல இருந்த பாசத்தால இல்ல. உனக்கு பழிவாங்கத்தான்.
என்ன சொல்ற செல்லம்மா...?
ஆமாய்யா... எனக்கு அப்பனாத்தா இல்லன்னாலும் நான் கவுரதயா வாழ்ந்தவ, எனக்கு பிச்சை போட நீ யார்..? ஆம்பளங்கிற திமிர்தான..? இப்ப நாந்தான் உனக்கு பிச்சை போட்டுருக்கேன். ஆமா... இனிமே நீ சுதந்தரமா வாழப்போற ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் நான் உனக்கு போட்ட பிச்சை. சாவும் போதும் நான் கவுரதயா செத்தேன்கிற நிம்மதி போதும் எனக்கு, திணறி திணறி பேசி முடித்த செல்லம்மாவின் கண்கள் நிலைகுத்தி நின்றது.
அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்
அழகான கதை
பதிலளிநீக்குஅடுக்கடுக்காக கிராமத்து வசனங்கள் வந்துகொண்டே இருக்கே சார் உங்களுக்கு
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சிட்டுக்குருவி.
நீக்குகனமான கதை !
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மிக்க நன்றி திருமதி. இராஜராஜேஸ்வரி.
நீக்குsuperb muthu. touching.
பதிலளிநீக்குthanks siva, hope you may know the story.
நீக்கு