செவ்வாய், 3 செப்டம்பர், 2013

புலிகளை வெறுக்கும் பெரியவர்

எனக்கு தெரிந்த ஒரு பெரியவர், விடுதலை புலிகளை பற்றி பேசும்போது மிக கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்துவார். ஏன் இவருக்கு விடுதலை புலிகள் மீது இவ்வளவு கோபம் என்று நான் நினைப்பதுண்டு. அதற்க்கான விடை இன்று கிடைத்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் இவர் ஒருவருடைய பரிதாபமான தோற்றத்தை பார்த்து, குறைந்த வாடகைக்கு வீடு
கொடுத்திருக்கிறார். அந்த நபர் ஒரு மாதம் சைக்கிளில் சென்றிருக்கிறார். அடுத்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். பின்பு அவர் வீட்டிற்க்கு நிறைய நபர்கள் வருவதும் தங்குவதுமாய் இருந்திருக்கிறது. அவரிடம் கேட்கும் போதெல்லாம் நண்பர்களுக்கு சென்னையில் யாரையும் தெரியாது அதனால் சென்னை வரும்போது இங்கு தங்கிச்செல்வார்கள். தயவு செய்து தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார். இரக்க குணம் கொண்ட பெரியவரும் சரியென்று சம்மதித்திருக்கிறார். திடீரென ஒருநாள் அந்த நபர் காவல்துறையால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறான். வீட்டை சோதனை செய்த காவல்துறையால் சில பைகள் கதிர்வீச்சு தன்மையுடைய பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த அந்த நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டார். கடைசியில் வீடு வாடகைக்கு விட்ட பாவத்திற்க்கு அந்த பெரியவரும் கோர்ட் கேஸ் என்று அலைந்து அவமானப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டார்.

இவரைப்போல் இதே சென்னையில் பலரை நான் சந்தித்ததுண்டு. 1997-99 காலப்பகுதிகளில் மேன்சன்களில் தங்கியிருந்த போது பல முறை நடுநிசியில் காவல்துறை அறைகளில் நுழைந்து சோதனை நடத்தியதுண்டு. இன்று தமிழ்நாட்டில் புலிகளுக்கு எதிரான கருத்து சொல்கின்றவர்களை உலகின் எங்கோ ஒரு மூலையில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு  சமூக வலைத்தளங்களின் வாயிலாக திட்டி தீர்த்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு சொல்ல விரும்புவதெல்லாம், ஈழத்திற்க்காக நீங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு எவ்விதத்திலும் குறையாமல் உங்களுக்காக, உங்கள் பிரச்சினைக்கு சம்பந்தப்படாத, ஒரு கூட்டமே தமிழ்நாட்டில் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவை நீங்கள் சாடிக்கொண்டிருக்கும் அதேவேளையில், தமிழ்நாட்டில் “மெட்ராஸ் கஃபே” க்காக போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு இந்திய தமிழர்கள் குரல் கொடுப்பது போல், இந்திய தமிழர் பிரச்சினைக்கு நீங்கள் தோள் கொடுங்கள். இதை நீங்கள் செய்ய தவறினால் அந்த பெரியவர் எப்படி புலிகளை எதிரியாக பார்கிறாரோ அதேபோல் தமிழ்நாடும் உங்களை எதிர்காலத்தில்  காண நேரிடும்.

அன்புடன் முத்துக் குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்